காட் எழுத்து அமலில் விருப்பத் தேர்வு என்பதற்கு விளக்கம் தேவை- டிஏபி பிரதிநிதி

தொடக்கநிலைப் பள்ளிகளில் சிறிய மாற்றங்களோடு அரபுச் சித்திர எழுத்துப் பாடத்தை அமல்படுத்த செய்யப்பட்டிருக்கும் முடிவு குறித்து கல்வி அமைச்சு விளக்கம் தர வேண்டும் என்று டிஏபி புக்கிட் அசேக் சட்டமன்ற உறுப்பினர் விரும்புகிறார்.

கல்வி அமைச்சு அதன் அறிக்கையில் பயன்படுத்தியுள்ள “விருப்பத் தேர்வு” என்ற சொல்தான் குழப்பம் தருகிறது என்றாரவர்.

“கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் , ‘காட் எழுத்து அறிமுகம் பற்றி அறிவித்தபோது அது விருப்பத் தேர்வு முறையில் அமல்படுத்தப்படும் என்றும் வகுப்பறைகளில் அதை எப்படி அமல்படுத்துவது என்று தீர்மானிக்கும் அதிகாரத்தை ஆசிரியரிடமே விட்டுவிடுவதாகவும் கூறினார். அதில் விருப்பத் தேர்வு என்பதற்கு அவர் விளக்கமளிக்க வேண்டும்.

“அமைச்சரின் அறிக்கை குழப்புகிறது. ஜாவி சித்திர எழுத்து வடிவத்தை அமல்படுத்துவதா கூடாதா என்பதை முடிவு செய்யும் உரிமை ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்படுகிறா அல்லது எப்படி அமல்படுத்தலாம் என்பதை முடிவு செய்யும் உரிமை மட்டுமே அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பது தெளிவாக இல்லை”, என்றார். அறிக்கையில் தெளிவு இல்லை என்பதால் முன்னுக்குப் பின் முரணான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

“பள்ளிகளும் ஆசிரியர்களும் அடுத்த பள்ளி ஆண்டுக்குத் தங்களை ஆயத்தப்படுத்திகொள்ள கல்வி அமைச்சு இதை விளக்குவது அவசியம்”, என்றவர் சொன்னார்.

சரவாக் டிஏபியைப் பொறுத்தவரை தங்கள் பிள்ளைகள் காட் பயில்வதை அனுமதிப்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் உரிமை பெற்றோருக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் அதன் நிலைப்பாடு என்றும் சாங் கூறினார்.