நேற்றிரவு கிளந்தான், கோத்தா பாருவில் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவில் சர்ச்சைக்குரிய சமய போதகர் ஜாகிர் நாய்க், பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டை வானளாவ புகழ்ந்துரைத்தார்.
மத்திய கிழக்கில் பெரு வல்லரசுகளான அமெரிக்காவும் யுனைடெட் கிங்டமும் மேற்கொண்ட நடவடிக்கைகளைக் கண்டித்த மகாதிரின் துணிச்சலை அவர் பாராட்டினார்.
“2011-இல் போர் குற்றங்களை விசாரிக்க ஒரு நடுவர் மன்றத்தை அமைத்த ஒரே முஸ்லிம் தலைவர் அவர்தான். அது அமெரிக்காவும் யுகே-யும் ஈராக் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை வைத்திருப்பதாக பொய்யான ஆதாரங்களைக் காட்டியிருப்பதைக் கண்டறிந்து கூறியது.
“அப்படி ஒரு துணிச்சல் மலேசியாவைத் தவிர வேறு எந்த முஸ்லிம் நாட்டுக்கும் இல்லை”, என்றவர் குறிப்பிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.