ஒருதலைப்பட்ச மதமாற்றத்தை எதிர்ப்பதில் எக்ஸ்கோ தீவிரம்

சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் (எக்ஸ்கோ) வி.கணபதி ராவ் ஒருதலைப்பட்ச மதமாற்றத்தை எதிர்ப்பதில் முழு மூச்சாக இருக்கிறார். அதில் அரசியல் வாழ்க்கையையே பறிபோனாலும் கவலையில்லை என்கிறார்.

கணபதிரா உள்பட மலாய்க்காரர்- அல்லாத எக்ஸ்கோகள் நால்வர் ஒருதலைப்பட்ச மதமாற்றத்துக்கு வழிகோலும் சட்டத் திருத்தங்களை எதிர்ப்பது குறித்து விளக்குவதற்கு அண்மையில் சிலாங்கூர் சுல்தானைச் சந்தித்தனர். அச்சந்திப்பு குறித்து அவர்கள் இதுவரை வெளியில் எதுவும் தெரிவிக்கவில்லை. கணபதிராவ் மட்டும் முகநூலில் பதிவிட்டிருந்தார். அதற்கு அவர், “ஒருதலைப்பட்ச மதமாற்ற விவகாரத்தில் என் முடிவு தெள்ளத் தெளிவானது”, என்று தலைப்பிட்டிருந்தார்.

“நீதியும் நியாயமும் எந்தவொரு தனிப்பட்ட சமயத்துக்கோ இனத்துக்கோ உரியதன்று. எல்லா மனிதர்களுக்கும் உரியது. அது பாரபட்சமின்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அனைவரிடத்திலும் நீதியும் நியாயமும் அன்பும் பாராட்டும் மனித நேயமே ஒப்புயர்வற்ற சமயமாகும்.

“என் அரசியல் வாழ்க்கையே பறிபோவதாக இருந்தாலும் சரி என் கொள்கைகளில் உறுதியாக நிற்பேன்”, என்றவர் குறிப்பிட்டிருந்தார்.

சுல்தானுடனான சந்திப்பு குறித்து சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதாக சில வட்டாரங்கள் மலேசியாகினியிடம் தெரிவித்தன. சட்டத் திருத்தங்களால் ஏற்படக்கூடிய சிக்கல்களை எக்ஸ்கோகள் எடுத்துரைத்ததை ஆட்சியாளர் பரிவுடன் கேட்டுக்கொண்டார் என்று தெரிகிறது.

சிலாங்கூர் மந்திரி புசார் அமிருடின் ஷாரி சிலாங்கூர் இஸ்லாமிய சமய விவகாரம் மன்றம் (மாயிஸ்) தயாரித்துக்கொடுத்த சட்டத் திருத்தத்தைப் பக்கத்தான் ஹரப்பான் உறுப்பினர்களில் பெரும்பாலோர் எதிர்த்தும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய முயன்றபோதுதான் அது ஒரு அரசியல் நெருக்கடியாக மாறியது.

சட்டத் திருத்தம் ஹரப்பானைப் பாதிக்கும் என்பதால் சிலாங்கூர் சுல்தானைச் சந்தித்து நிலைமையை விளக்குமாறு அவர்கள் அமிருடினிடம் ஆலோசனை கூறினார்கள்.

அமிருடின் அதனைப் பொருட்படுத்தாமல் சட்டத் திருத்தத்தை அவைத் தலைவர் இங் சுவீ லிம்மிடம் ஒப்படைத்தார். அவர், அதற்கு முன்னுரிமை அளித்துத் தாக்கல் செய்ய விரும்பாமல் சட்டமன்றக் கூட்டத்தையே முடித்து வைத்தார். இதனால், சட்டத் திருத்தம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவது நின்று போனது.

அச்சட்டத் திருத்தத்தை எதிர்ப்பது ஏன் என்பதை விளக்குவதற்காகத்தான் அந்த நால்வரும் சுல்தானைச் சந்தித்தனர்.