சர்ச்சைகள் இருந்தபோதிலும் கல்வி சீர்திருத்தம் தேவை

கறுப்பு காலணிகள் பயன்பாடு, மெட்ரிகுலேஷனில் கோட்டா முறைமை, ஆரம்பப்பள்ளி மலாய் பாடத்தில் ஜாவி எழுத்து என, ஒன்றன்பின் ஒன்றாக பல சர்ச்சைகளில் கல்வி அமைச்சு எதிர்கொண்டு வருகிறது.

பக்காத்தான் ஹராப்பன் (பி.எச்.) அரசாங்கம் அமைத்த 15 மாதங்களுக்குப் பிறகு, தொழில்துறை 4.0 புரட்சியால் மலேசியா பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதியான திட்டங்களை முன்வைக்க அக்கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது, சர்வதேச வர்த்தக வாரியத்துடனான சந்திப்பில், மலேசியக் கல்வி முறை, தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட வேண்டும் என்பதை ஒப்புக் கொண்டார்.

“கல்வி என்பது அதிகமாகக் கலைகளைப் பற்றியதாக இருக்கக்கூடாது, மாறாக, தொழில்துறை சார்ந்ததாக இருக்க வேண்டும்.

“நிச்சயமாக, ஜெர்மனியின் கல்வி அமைப்பு முறைமை சிறந்ததாக இருக்க வேண்டும், அங்கு மூன்றில் ஒரு பங்கு வகுப்பறையில் செலவிடப்படுகிறது, மற்றுமொரு பங்கு வேலைவாய்ப்புகளைப் பற்றியது,” என்று அவர் கூறினார்.

கடந்த செவ்வாயன்று, முன்னாள் நிதியமைச்சர் டைம் ஜைனுதீனும் குரல் கொடுத்தார், பிரச்சனைகளுக்குத் தீர்வு காண, கல்வி அமைச்சு கொடுக்கும் முன்னுரிமை பற்றி அவர் விமர்சித்திருந்தார்.

“தொழில்துறை புரட்சி 4.0-க்கான தயாரிப்பில், பொருளாதாரம் குறித்த அறிவு மேம்படுத்தப்பட வேண்டும். ஆனால், கல்வி அமைச்சு அதற்கு முன்னுரிமை வழங்கவில்லை. கல்வி அமைச்சு இந்த நாட்டைத் தோல்வியடையச் செய்யக்கூடாது.

“நாம் இன்னும் மொழி சொல்லாட்சியில் சிக்கியுள்ளோம், அதே நேரத்தில் நம்மைச் சுற்றியுள்ளவர்கள், ஆங்கிலம் அல்லது மாண்டரின் அல்லது பஹாசா மலேசியாவிலிருந்து நிரலாக்க மற்றும் குறியீட்டு மொழிகளுக்கு மாறிவிட்டனர்,”

“நாம் மிகவும் பின்தங்கியிருக்கிறோம் என்பதை எப்போது உணருவோம்,” என்று டைம் கூறியதாக ‘தி எட்ஜ் பைனான்சியல் டெய்லி’ மேற்கோள் காட்டியுள்ளது.

“சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் முன்னாள் அமைச்சர் ரஃபீடா அஜீஸ்-உம், கல்வி முறைமையை மேம்படுத்துவதில் கல்வி அமைச்சை விமர்சித்துள்ளார்.

“தேவையற்ற மற்றும் அற்பமான விஷயங்களுடன் (கல்வி முறையை) குழப்ப வேண்டாம்” என்று அவர் வியாழக்கிழமை பிரதமர் அறக்கட்டளையில் ஆற்றிய உரையில் கூறினார்.

இதற்கிடையே, 4-ஆம் ஆண்டு மலாய் மொழி பாடத்தில் ஜாவி எழுத்தை அறிமுகம் செய்யவேண்டும் எனும் கல்வியமைச்சின் திட்டத்தை, இஸ்லாமியமயமாக்கலின் அடிப்படையாகவும் இஸ்லாமுடனான அதன் உறவாகவும் மலாய் அல்லாத சமூகம் கருதுகிறது.