கெடாவில் புயலால் 171 பள்ளிகள் சேதமடைந்தன

கடந்த வெள்ளிக்கிழமை கெடா மாநிலத்தில் வழக்கத்துக்கு மாறாக கடும் மழையுடன் வீசியடித்த புயலில் 171 பள்ளிகள் சேதமுற்றதாக மாநில கல்வி, மனிதவள விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆட்சிக்குழு உறுப்பினர் சல்மீ சைட் கூறினார்.

நேற்றிரவு பத்து மணி வரை கிடைத்த தகவல் அது. லங்காவி, பெண்டாங், சிக், பாலிங், கோத்தா ஸ்டார், குபாங் பாசு, கோலா மூடா , யான், பாடாங் திராப், கூலிம்-ப்ண்டார் பாரு ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகள் அவை என்று சல்மி குறிப்பிட்டார்.

“இடிந்து விழுந்த கூரைகள் உடனடியாக பழுதுபார்க்கப்படும். சில பள்ளிகளில் சீரமைக்கும் வேலை முடிவுற ஒரு மாதமாகலாம்”, என்றாரவர்.

ஆகஸ்ட் 17வரை பள்ளி விடுமுறை என்பதால் பழுதுபார்க்கும் வேலைகளால் கல்வித் தவணை அவ்வளவாகப் பாதிக்கப்படாது என்றும் சல்மீ கூறினார்.