நெடுஞ்சாலை கோர நிகழ்வை இன விவகாரமாக்காதீர்: போலீஸ் எச்சரிக்கை

பாங்கியில் சாலை விபத்து தொடர்பில் இருவர் சர்ச்சையிட்டுக் கொண்டதில் அது ஒருவரின் கொலையில் முடிந்த சம்பவம் தொடர்பில் பொய்யான தகவல்களைப் பரப்பி அதை இன விவகாரமாக்கி விடக்கூடாது என்று துணை இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் மஸ்லான் மன்சூர் எச்சரித்துள்ளார்.

நடந்த சம்பவத்தை போலீஸ் விளக்கி இருப்பதுடன் அதற்குக் காரணமானவர்கள் என்று ஐயுறப்படும் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதையும் அவர் ஓர் அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.

“பிளஸ் நெடுஞ்சாலை கிமீ239-இல் சனிக்கிழமை நிகழ்ந்த அச்சம்பவத்தில் ஒருவர் இறந்ததை அடுத்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு ஊகங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

“அச்சம்பவம் பற்றிய தகவல்களைத் திரித்துக்கூறி இன உணர்வுகளைத் தூண்டும் முயற்சிகளும் நடக்கின்றன.

“அச்சம்பவத்தை விளக்கி போலீஸ் பல அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறது. அதன் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டும் இருக்கிறார்கள். சம்பவத்தை நேரில் கண்டவர்களை விசாரணைக்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

“அப்படி இருக்க, சமூக வலைத்தளங்களைத் தவறாகப் பயன்படுத்தி நாட்டின் இன ஒற்றுமையைக் கெடுத்து விடாதீர்கள் என மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்”, என்றாரவர்.