எந்தவொரு அரசாங்கக் கொள்கையையும், மக்களிடம் அறிவிக்கும் முன், அதனை உன்னிப்பாக மறுஆய்வு செய்ய, ஓர் உயர்மட்டக் குழுவைப் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) அமைக்க வேண்டுமென மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) அழைப்பு விடுத்துள்ளது.
பி.எஸ்.எம். தேசியத் தலைவர் டாக்டர் ஜெயக்குமார் தேவராஜ், மொழி, மதம் மற்றும் கல்வி தொடர்பான அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை ஓர் அமைச்சர் அறிவிப்பதற்கு முன்னர், அது அக்குழுவின் வழியாக செல்ல வேண்டும் என்றார்.
தேசிய வகைப் பள்ளிகளில் ஜாவி எழுத்து அறிமுகம் மற்றும் ஒருதலைப்பட்ச மத மாற்றத்திற்கு வழி வகுக்கும் வகையில், சட்டத்தில் திருத்தங்களை முன்மொழியவுள்ள சிலாங்கூர் மாநில அரசின் திட்டம் போன்றவற்றால், பி.எச். அரசாங்கம் எதிர்நோக்கியிருக்கும் சிக்கல்களைத் தொடர்ந்து, பி.எஸ்.எம். இந்த ஆலோசனையை வழங்கியுள்ளது.
ஜெயக்குமாரின் கூற்றுப்படி, பல்லின மலேசியர்கள், ஒருவருக்கொருவர் தங்கள் கலாச்சாரங்களைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்ற கருத்தைப் பி.எஸ்.எம். ஆதரிக்கிறது. ஆனால், சரியான ஆலோசனையின்றி ஜாவி எழுத்தை அறிமுகப்படுத்துவது இனங்களுக்கு இடையிலான இடைவெளியை விரிவாக்கக்கூடும்.
“மலாய்க்காரர் அல்லாத பல பெற்றோர்கள், அரசுப் பள்ளிகளில் படிக்கும் தங்கள் குழந்தைகளிடம் இஸ்லாமியமயமாக்கல் போக்கைப் பற்றி கவலைப்படுகிறார்கள் என்பது பற்றி மஸ்லீ மாலிக் (கல்வி அமைச்சர்) அறிந்திருக்கிறாரா?
“இந்த ‘க்ஹாட்’ எழுத்து அறிமுகத் திட்டத்தின் வழி, அரசாங்கம் ‘இஸ்லாமியத்தை’ திணிக்கிறது என அவர்களில் பெரும்பான்மையோர் சந்தேகிக்கின்றனர்.
“அடுத்து, சிலாங்கூர் மாநில அரசு பெற்றோர்களால் ஒருதலைப்பட்ச மதமாற்றத்தை அனுமதிக்கும் மசோதாவைக் கொண்டுவர முயற்சிக்கிறது. இந்தப் பிரச்சினை கடந்த பத்து ஆண்டுகளாக ஒரு சில தம்பதிகளை மட்டுமே பாதித்திருந்தாலும், இது பரவலாக விவாதிக்கப்பட்ட மற்றும் உணர்ச்சி வசப்பட வைத்த பிரச்சினை,” என்று அவர் ஓர் அறிக்கையின் வழி இன்று தெரிவித்தார்
‘மிகவும் நியாயமான மற்றும் இணக்கமான சமுதாயத்தை’ உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பி.எச். அரசாங்கத்தின் போக்கு ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
“பி.எச். அரசாங்கத்தில் என்ன நடக்கிறது? இந்த இனப் பிரச்சினை, பி.எச். கூட்டணியின் ஒரு குறிப்பிட்ட கட்சியைப் பலவீனப்படுத்துவதும் /அல்லது சில தலைவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதும் அதன் நோக்கமாக இருக்கலாம் என சிலர் ஊகிக்கின்றனர்.
“இதன் அடிப்படையிலேயே, அமைச்சர்கள் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு முன், மொழி, மதம் மற்றும் கல்வி பிரச்சினைகள் தொடர்பான அனைத்து புதிய கொள்கைகள் மற்றும் திட்டங்களை மறுஆய்வு செய்ய, உயர் மட்டக் குழுவொன்றை அமைக்க வேண்டுமென, பி.எச். தலைவர்கள் கவுன்சிலுக்குப் பி.எஸ்.எம். ஆலோசனை வழங்க விரும்புகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
அதே நேரத்தில், கல்வி அமைச்சு மற்றும் சிலாங்கூர் அரசாங்கத்தின் திட்டங்களை ஏற்காதப் பொதுமக்கள், அவர்களின் வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார்.
“சரியாக வடிவமைக்கப்படாத ஒரு திட்டத்தை எதிர்ப்பதற்கு உங்களுக்கு உரிமை உண்டு, அதேசமயம், எந்த இனத்தையும் மதத்தையும் கண்டிக்க, அது உங்களுக்கு உரிமம் (லைசன்ஸ்) அளிக்காது,” என்று அவர் மேலும் கூறினார்.