நாளைய அமைச்சரவைக் கூட்டம் காரசாரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. லைனாஸ் நிறுவனத்தின் லைசென்ஸைப் புதுப்பிப்பது ஏற்கனவே பக்கத்தான் ஹரப்பானில் சர்ச்சைக்குரிய ஒரு விவகாரமாக இருந்து வருகிறது. நாளை அமைச்சரவைக் கூட்டத்தில் அவ்விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது அமைச்சர்கள் அதற்கு ஒப்புதல் அளிப்பார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இது ஒரு புறமிருக்க, கடந்த வார நாட்டு நடப்பைப் பார்க்கும்போது நாளைய அமைச்சரவைக் கூட்டத்தை வேறு சில விவகாரங்களும் ஆக்கிரமித்துக்கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.
அவற்றுள் ஒன்று காட் ஓவிய எழுத்தின் அறிமுகம். அடுத்த ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு காட் ஓவிய எழுத்து அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஆனால், அறிமுகமாவதற்கு முன்பே அந்த ஓவிய எழுத்துக்கு எதிர்ப்புக் கிளம்பியது. கல்வி அமைச்சு எதிர்ப்பாளர்களைச் சமாதானப்படுத்த ஆறு பக்கமாக இருந்த காட் எழுத்துப் பாடங்களை நான்கு பக்கங்களுக்குச் சுருக்கியதுடன் அதைக் கட்டாயப்பாடம் என்ற நிலையிலிருந்து விருப்பப் பாடமாக மாற்றினாலும்கூட எதிர்ப்பு அடங்கவில்லை.
தாய்மொழிப் பள்ளி மாணவர்களின் பணிச்சுமை அதிகரிக்கும் என்பதால் காட் எழுத்துப் பாடத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக முதலில் கூறிக் கொண்டிருந்த டோங் ஸோங் )சீனக் கல்வியாளர்களின் அமைப்பு) பின்னர் காட் எழுத்து அறிமுகம் “இஸ்லாத்தைப் புகுத்தும் முயற்சி” என்று கூறியது.
இதனால் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அதை “இனவாத அமைப்பு” என்று முத்திரை குத்தினார். அவரது பெர்சத்து கட்சியினர் சும்மா இருப்பார்களா, அதன் இளைஞர் பிரிவினர் குறிப்பிட்ட அந்த விவகாரத்தைத் தற்காக்க மலாய்க்காரர்கள் ஒன்றுபட வேண்டும் என்றும் டோங் ஸோங்கைச் சட்டவிரோத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதனிடையே, டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் சர்ச்சை மோசமடைந்து வருவதைத் தடுக்கும் நோக்கில் மகாதிர், டோங் ஸோங் இரு தரப்பும் ஒருவரை மற்றவர் குற்றம் சொல்வது சரியல்ல என்று கூறினார். கல்வி துணை அமைச்சர் தியோ நை சிங்கும் இரு தரப்பினரும் தடைச் சுவர்களை எழுப்பாமல் தொடர்புமுறைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், காட் விவகாரத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று நாளைய கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்போவதாகக் கூறினார். அவர் காட் எழுத்து அறிமுகத் திட்டத்தில் மேலும் சில சலுகைகளைக் கோரப் போகிறாரா அல்லது அத்திட்டத்தையே ஒட்டுமொத்தமாகக் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்வாரா என்பது தெரியவில்லை.
இது இப்படி இருக்க, கடந்த வெள்ளிக்கிழமை கிளந்தான் பாஸ் அரசு ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றிய ஜாகிர் நாய்க்கின் பேச்சு இன்னொரு விவகாரமாக வெடித்துள்ளது.
அந்த மனிதர் தன்னுடைய பேச்சில் மலேசியா-வாழ் இந்துக்கள் மலேசியப் பிரதமரைவிட இந்திய பிரதமர் நரேந்திர மோடியைத்தான் அதிகம் நேசிக்கிறார்கள் என்று சொல்லப் போக அதற்கு இந்திய தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஜாகிரை இங்கு தங்கியிருக்க அனுமதித்தவர் மகாதிர்தான் என்பதால் ஜாகீர்மீதான ஆத்திரம் மகாதிருக்கு எதிரானதாகவும் திரும்பியுள்ளது.
ஜாகிர் விவகாரத்தையும் நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் கொண்டு வரப் போவதாக டிஏபி உதவித் தலைவர் எம்.குலசேகரன் கூறியுள்ளார்.
காட், ஜாகிர் நாய்க் இரண்டுமே சர்ச்சைக்குரிய விவகாரங்கள். இவை போக, லைனாஸ் லைசென்ஸ் விவகாரமும் இருக்கிறது.
நாளைய கூட்டத்தில் இவை விவாதிக்கப்படவுள்ள வேளையில் டிஏபி நாடு முழுக்க உள்ள அதன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களைக் கோலாலும்பூருக்கு அழைத்துள்ளது. இன்றைய இரவுக் கூட்டத்தில் அவர்கள் தங்கள் கருத்துகளைத் தலைவர்களிடம் எடுத்துரைப்பார்கள்.
டிஏபி தலைவர்கள் சிலர் மகாதிருக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு, பிரதமரிடம் குவிந்துள்ள அதிகாரத்தைக் குறைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சுங்கை பீலேக் சட்டமன்ற உறுப்பினர் ரோன்னி லியு , லைனாஸ் அரிய மண் ஆலையை மூடினால் அது முதலீட்டாளர்களிடையே அச்சத்தை உண்டு பண்ணும் என்று மகாதிர் கூறுவதை ஏற்கவில்லை.
இவர்களைப்போல் மற்றவர்களும் இன்றிரவு டிஏபி கூட்டத்தில் அவரவர் கருத்துகளை எடுத்துரைப்பார்கள்.
டிஏபி கட்சியினர் கருத்தைக் கேட்டு மகாதிரும் சும்மா இருக்கவில்லை. அடுத்த முறை முடிவெடுக்குமுன்னர் டிஏபி தலைவர்களைக் கேட்டுக்கொண்டுதான் முடிவு செய்வேன், சரியா, என்று கிண்டலடித்துள்ளார் அவர்.