‘வாயை மூடிக்கொண்டு வேலை செய்யுங்கள்’, மஸ்லிக்கு சந்தியாகோ அறிவுறுத்து

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ, தற்போதைய உணர்ச்சியைத் தூண்டும் வகையிலான சர்ச்சைகளில், பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் ஒருதலைப்பட்சமாக முடிவுகளை எடுத்தாரா என்பது குறித்து புதிய தாக்குதலைத் தொடங்கியுள்ளார்.

ஃபிரி மலேசியா டுடே அறிக்கையின்படி, “ஒருதலைப்பட்ச முடிவெடுத்தார் என மகாதீர் மீது குற்றம் சுமத்துவது ஆதாரமற்றது, முற்றிலும் அப்பட்டமான பொய்” என்று, அந்தப் பெர்சத்து கட்சித் தலைவரைக் கல்வி அமைச்சர் ஆதரித்துப் பேசிய பின்னர், சந்தியாகோ, மஸ்லி மாலிக்கிடம் இதனைக் கூறியுள்ளார்.

“என்னை பொய்யர் என்று அழைப்பது கடுமையானதொரு குற்றச்சாட்டு. மஸ்லீ வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும், அதைவிட முக்கியமாக, அவருடைய வேலையில் கவனம் செலுத்த வேண்டும்.

“நான் என்ன தவறு செய்தேன் என்று அவர் நிரூபிக்க வேண்டும், ஏனெனில் தற்காத்து கொள்வது என்பது எளிதான வழி,” என்று அவர் கூறினார்.

பேச்சு சுதந்திரத்திற்கான உரிமையைப் பேணி, சந்தியாகோ மஸ்லியிடம்: “நாம் புதிய மலேசியாவைச் சார்ந்தவர்கள், புதுமை மற்றும் சீர்த்திருத்தக் கொள்கைகளைக் கொண்டவர்கள் என்பதனாலேயே மக்கள் நமக்கு வாக்களித்து தேர்ந்தெடுத்துள்ளனர். கொள்கை வரைவு திட்டங்களில், மக்களின் குரலையும் ஈடுபடுத்துவது முக்கியம்,” என்று கூறியுள்ளார்.

சிம்பாங் ரெங்கம் எம்பி மஸ்லி மாலிக் தனது இலாகாவைக் கையாளும் விதம் குறித்தும் சந்தியாகோ விமர்சித்துள்ளார்.

“நாட்டில் கல்வி முறை சரிவர இல்லை, அதை மீட்டெடுத்து, சரியான பாதையில் கொண்டு செல்ல நிறைய வேலைகள் செய்ய வேண்டியுள்ளது. 13 மாதங்கள் ஓடிவிட்டன… இப்போது, மஸ்லி வேலை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது,” என்று அவர் கூறினார்.

நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான மலாய் பாடத்திட்டத்தில், ‘க்ஹாட்’ எழுத்து கற்றலை அறிமுகப்படுத்துவது குறித்து பி.எச். முடிவெடுத்த செயல்முறையைச் சந்தியாகோ விமர்சித்ததைத் தொடர்ந்து, மகாதீரை மஸ்லீ பாதுகாத்து பேசினார்.

“அவர் (மகாதீர்), பி.எச்.-ல் சிறுபான்மையாக இருக்கும் கட்சியிலிருந்து வந்திருந்தாலும், இந்த முடிவை அவரே எடுத்துள்ளார்,” என்று கூறிய சந்தியாகோ, “அரசாங்கத்தில் இனம் மற்றும் மதம் சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய பிரச்சினைகளில், பி.எச். தலைவர்கள் கவுன்சிலில் கலந்துபேசிய பின்னரே தீர்மானிக்க வேண்டும்,” என்றார்.

அனைத்து வகையான இனப் பாகுபாடுகளை ஒழிப்பதற்கான சர்வதேச மாநாடு (ஐசர்ட்), ரோமானிய சட்டத்தின் ஒப்புதல் மற்றும் பஹாங்கில் அரியமண் சுரங்க நிறுவனமான லைனாஸ் கார்ப் போன்றவற்றின் முடிவுகளில் அரசாங்கம் யு-டர்ன் அடித்ததைச் சுட்டிக்காட்டிய சந்தியாகோ, இந்திய அரசாங்கத்தின் வேட்டையில் இருந்து தப்பி ஓடிவந்த ஜாகிர் நாயக் எனும் மத போதகரை மலேசியா பாதுகாத்து வருவதையும் மேற்கோள் காட்டினார்.

எவ்வாறாயினும், சந்தியாகோ மற்றும் மற்றொரு டிஏபி தலைவரான சுங்கை பெலேக் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியு இருவரின் கேள்விகளுக்கும் மகாதீர் சரியாக பதிலளிக்கவில்லை.

ஒரு கிண்டலான தொனியில், மகாதீர்: “எதிர்வரும் காலங்களில் நான் ஒரு முடிவை எடுக்கும் முன்னர், சந்தியாகோ ஏற்றுக்கொள்கிறாரா, இல்லையா என்று கேட்பேன். அவர் என்னுடன் உடன்படவில்லை என்றால், நான் அதனைச் செய்யமாட்டேன், அவரின் கருத்தையும் நான் கேட்கவேண்டும், காரணம் அவர் எனக்குச் சமமானவர்,” என்று பதிலளித்தார்.

அதே நேரத்தில், ஜாகீர் நாட்டில் தங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததா என்றும், அப்படியானால், அம்முடிவு எப்போது எடுக்கப்பட்டது என்று கூறும்படியும், சந்தியாகோ மஸ்லியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.