மலேசிய இந்துக்களின் “விசுவாசம்” குறித்துக் குறைசொல்லவில்லை- ஜாகிர் விளக்கம்

சர்ச்சைக்குரிய சமய போதகர் ஜாகிர் நாய்க், மலேசிய இந்துக்கள் பற்றித் தான் கூறிய விசயங்களைத் திரித்துக் கூறிக் குழப்பத்தை உண்டுபண்ண முயல்கிறார்கள் என்று கூறுகிறார்.

அவர் மலேசிய இந்துக்கள் மலேசிய பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டைவிட இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம்தான் அதிக விசுவாசம் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியதாக சொல்லப்படுவதன் தொடர்பில் அவர் பலரது கண்டனங்களுக்கு ஆளாகியுள்ளார்.

ஆனால், அவர் அப்படிச் சொல்லவில்லையாம்.

“எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் விசயத்தில் மலேசியாவில் உள்ள இந்துக்களில் சிலர், இண்டர்போலையோ இந்திய நீதிமன்றங்களையோ, மலேசிய அரசாங்கத்தையோ நம்புவதைவிட மோடி அரசாங்கம் சொல்வதைத்தான் அதிகம் நம்புவது எனக்கு நியாயமாகப் படவில்லை என்றுதான் சொன்னேன்.

“மலேசிய அரசாங்கம் இந்து சிறுபான்மையினரிடம் நியாயமாக நடந்து கொள்வதை நான் பாராட்டியிருந்ததை அப்படியே திரித்துக்கூறி சமூகங்களுக்கிடையில் பிளவை உண்டுபண்ண முயல்கிறார்கள்” , என்றவர் நேற்றிரவு அறிக்கை வெளியிட்டிருந்தார்.