மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) சுற்றுச்சூழல் பிரிவு ஒருங்கிணைப்பாளரான சரண்ராஜ், மலேசியாவில் உற்பத்தி செய்யும் கதிரியக்க மற்றும் இரசாயனக் கழிவுகளைச் சேமிக்க அனுமதிப்பதன் மூலம், நாட்டைக் ‘குப்பைத் தொட்டியாக’ மாற்ற லைனஸ் நிறுவனத்தைப் அனுமதிக்க வேண்டாம் எனப் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) அரசாங்கத்திற்கு ஓர் அறிக்கை வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார்.
ஆஸ்திரேலிய அரசாங்கம், ‘பாசெல்’ மாநாட்டைப் பயன்படுத்தி, ஆஸ்திரேலியாவில் இருந்து மலேசிய லைனஸ் ஆலைக்குக் கொண்டுவரப்படும் கதிரியக்கக் கழிவுகளை, மீண்டும் மேற்கு ஆஸ்திரேலியாவுக்குள் இறக்குமதி செய்வதைத் தடுத்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் வரை, 451,564 டன் திரவப் பொருள் சுத்திகரிப்பு (water leach purification –WLP) மற்றும் 1.113 மில்லியன் மெட்ரிக் டன் நியூட்ரலைசேஷன் அண்டர்ஃப்ளோ (neutralization underflow –NUF) பஹாங், கேபேங், லைனஸ் ஆலையில் சேகரிக்கப்பட்டுள்ளன. 2032-ம் ஆண்டு வாக்கில், லைனஸ் ஆலை 1.5 மில்லியன் டன் WLP மற்றும் 3.7 மில்லியன் டன் NUF-ஐ உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“லைனஸ் நிறுவனம், மலேசியாவை ஒரு ‘குப்பைத் தொட்டி’ போல பயன்படுத்துகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. உலகின் 4-வது பெரிய பாலைவனத்தைக் கொண்டிருந்தபோதிலும், லைனஸ் எச்சத்தை ஏற்க ஆஸ்திரேலியா மறுத்துவிட்டது. 5.2 மில்லியன் டன் கதிரியக்க மற்றும் இரசாயனக் கழிவுகளை மலேசியா கையாள நிர்பந்திக்கப்பட்டிருக்கும் வேளையில், லைனஸ் பங்குதாரர்கள் தொடர்ந்து இலாபத்தை அனுபவித்து வருகின்றனர்,” எனப் பி.எஸ்.எம். மத்தியச் செயலவை உறுப்பினருமான சரண்ராஜ் தெரிவித்தார்.
“கதிரியக்கக் கழிவுகளை வணிகமயமாக்க முடியும் என்று மக்களை நம்ப வைக்க, லைனஸ் பெரும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. ஆனால், அக்கழிவுகளை உரமாகப் பயன்படுத்துவது, பயிர்களில் உலோக உள்ளடக்கம் அதிகரிக்க வழிவகுக்கும். WLP-இலிருந்து ‘தோரியம்’ -ஐ அகற்றுவதற்காக நடத்தப்பட்ட பல பரிசோதனைகள் தோல்வியிலேயே முடிந்துள்ளன. அதுமட்டுமின்றி, WLP-ஐ மேம்படுத்துவது என்பது சாத்தியமற்ற ஒன்று,” என்று சரண்ராஜ் மேலும் கூறினார்.
“பிளாஸ்டிக் கழிவு பிரச்சினையின் போது, எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர், இயோ பீ யின் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அதில், பிளாஸ்டிக் இறக்குமதியாளர்களை நாட்டின் ‘துரோகிகள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
“மலேசியாவில் 5.2 டன் கதிரியக்க மற்றும் இரசாயனக் கழிவுகளைச் சேமிக்க அனுமதிப்பதன் மூலம், பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் ‘அதிகப்படியான தேசத்துரோகத்தைச்’ செய்கிறது,” என்று சரண்ராஜ் கூறினார்.
எஞ்சியக் கதிரியக்கக் கழிவுகள் அனைத்தையும் ஆஸ்திரேலியாவுக்குத் திருப்பி அனுப்பும் வரை, லைனஸ் நிறுவனம் இங்குத் தொடர்ந்து இயங்க அனுமதிக்கக் கூடாது.
லைனஸ் கழிவுகளை நிரந்தரமாக அகற்றுவது அதிக ஆபத்தானது, காரணம் இயற்கைப் பேரழிவு ஏற்பட்டால், பாசீர் கூடாங்கில் ஏற்பட்ட மாசு விளைவுகளை விட, மிக மோசமான விளைவுகளை இது ஏற்படுத்தும். எனவே, லைனஸ் நிறுவனம் இங்கு தொடர்ந்து செயல்படாமலிருக்க, அதன் உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டாம் என்று பி.எச். அரசாங்கத்தைப் பி.எஸ்.எம். கேட்டுக்கொள்கிறது.