ஜாகிர் நாய்க்மீது 100-க்கும் மேற்பட்ட போலீஸ் புகார்கள்

இஸ்லாமிய சமயப் போதகர் டாக்டர் ஜாகிர் நாய்க் கடந்த வாரம் கிளந்தானில் ஆற்றிய உரையைப் போலீஸ் உன்னிப்பாக ஆராய்ந்து வருகிறது.

சர்ச்சைக்குரிய அச்சமய போதகருக்கு எதிராக நூற்றுக்கு மேற்பட்ட புகார்கள் செய்யப்பட்டிருப்பதாக கூட்டரசு சிஐடி தலைவர் ஹூசிர் முகம்மட் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 8-இல் ஆற்றிய உரையில் ஜாகிர் மலேசியா-வாழ் இந்துக்களின் விசுவாசம் குறித்துக் கேள்வி எழுப்பினார், சீன மலேசியரை நாட்டின் “பழைய விருந்தாளிகள்” என்று குறிப்பிட்டார்.

மலேசியாவில் வசிப்பிடத் தகுதி கொண்டவரான ஜாகிர் மலேசிய இந்துக்களின் விசுவாசம் குறித்துக் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுவதை மறுத்தார். அப்படிச் சொன்னதில்லை, சொன்னதை வேறு விதமாகத் திரித்துக் கூறி விட்டார்கள் என்றார். ஆனால், மலேசியச் சீனர்களைப் “பழைய விருந்தாளிகள்” என்று குறிப்பிட்டதாகச் சொல்லப்படுவது பற்றி அவர் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.