லைனஸ் மலேசியா சென். பெர். நிறுவனத்தின் உரிமத்தை நீட்டிக்க, அரசாங்கம் எடுத்துள்ள முடிவானது மக்களுக்கும் நாட்டின் சுற்றுச்சூழலுக்கும் செய்யும் துரோகமாகும்.
மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) மத்தியச் செயலவை உறுப்பினரான சரண்ராஜ், இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், மலேசியாவில் லைனஸ் தொடர்ந்து செயல்பட அனுமதித்ததன் வழி, உலகத்திற்கு ஒரு தப்பான செய்தியை அரசாங்கம் அறிவித்திருக்கிறது என்று கூறியுள்ளார்.
“ஆஸ்திரேலியாவைவிட 4 மடங்கு செலவு குறைவு என்பதனால், லைனஸ் நிறுவனம் அந்த அரிய மண் சுத்திகரிப்பைச் செய்ய மலேசியாவைத் தேர்ந்தெடுத்தது. அதுமட்டுமின்றி, அரிய மண்ணை மீண்டும் இறக்குமதி செய்ய ஆஸ்திரேலியா மறுப்பு தெரிவித்துள்ளதும் அதற்குக் காரணம்.
“லைனஸை இங்குச் செயல்பட அனுமதித்ததன் மூலம், அரசியல்வாதிகளின் ‘இனிப்பான வாக்குறுதிகளுக்கு’ கட்டுப்படும் வரை, மாசுபடுத்தும் எந்தவொரு தொழில்துறையையும் ஏற்க மலேசியா தயாராக இருக்கிறது எனும் தவறான சமிக்ஞையைப் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் உலகிற்கு அனுப்பியுள்ளது,” என்று அவர் கூறினார்.
நேற்று, பஹாங், கேபெங்கில் உள்ள அரிய மண்ணைப் பதப்படுத்தும் தொழிற்சாலையான லைனஸ் நிறுவனத்திற்கு, உரிம நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை அறிவித்தது.
நான்கு ஆண்டுகளுக்குள் லைனஸ் ஆலை அதன் திரவப் பொருள் சுத்திகரிப்பு (WLP) கழிவு உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கையில், பல நிபந்தனைகளுடன் அந்த ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது.
முந்தைய பாரிசான் நேஷனல் அரசாங்கம், மொத்த விற்பனையில் 1 விழுக்காட்டை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக செலவழிக்க வேண்டும் என லைனஸைக் கட்டாயப்படுத்தி இருந்தது. ஆனால், தற்போதைய நிர்வாகம் அதனை 0.5 விழுக்காடாகக் குறைத்து, லைனஸின் இலாபத்தை உயர்த்தியுள்ளது என்று சரண்ராஜ் கூறினார்.
இதன்வழி, லைனஸ் ஆண்டுக்கு RM4.3 மில்லியன் கூடுதல் இலாபத்தைப் பெறும் என்று பிஎஸ்எம் சுற்றுச்சூழல் பிரிவு ஒருங்கிணைப்பாளருமான சரண்ராஜ் கூறினார்.
“அடுத்த 23 ஆண்டுகளில், கூடுதலாக RM100 மில்லியனை லைனஸ் சம்பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்றார் அவர்.
மேலும், முந்தைய அரசாங்கம் நிலம் கையகப்படுத்தும் முத்திரைக் கட்டணத்தில் 100 விழுக்காடு விலக்கு அளித்ததாகவும் வரி செலுத்துவோரின் பணத்திலிருந்து RM1.2 மில்லியனை லைனஸுக்கு வழங்கியதாகவும் அவர் கூறினார்.
“ஆக, லைனஸ் செயல்படுவதற்கு முன்பே, மலேசியர்கள் கிட்டத்தட்ட RM5 மில்லியனை இழந்துள்ளனர். அடுத்த 12 ஆண்டுகளுக்கு, லைனஸுக்கு வழங்கப்படவுள்ள முழு வரி விலக்கை இன்னும் இதில் சேர்க்கவில்லை.
“2023-ம் ஆண்டுவாக்கில், மலேசியா கிட்டத்தட்ட 3.38 மில்லியன் டன் இரசாயன மற்றும் கதிரியக்கக் கழிவுகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும்,” என்று எச்சரித்த சரண்ராஜ், “நாட்டின் சுற்றுச்சூழலை மாசுபடுத்துபவர்களுக்கு, எந்தப் பிரச்சினையும் இல்லாமல், பி.எச். அரசாங்கம் நிதி சலுகைகளை வழங்கி வருவது வறுத்தமளிக்கிறது,” என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.