துன் எம் : பக்காத்தானுக்கும் பாரிசானுக்கும் வேறுபாடு இல்லை என்று கூறப்படுவது வறுத்தமளிக்கிறது

பக்காத்தான் ஹராப்பானும் பாரிசானைப் போன்றதுதான் என முத்திரை குத்தப்படுவதற்கு பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது இன்று வருத்தம் தெரிவித்தார்.

“இது உண்மையா? நாங்கள் RM42 பில்லியனைக் கடன் வாங்கியிருக்கிறோமா? எங்களிடம் 1எம்டிபி போன்ற ஊழல்கள் இருக்கிறதா?

“நான் பணத்தைத் திருடுகிறேனா? நான் மக்களைக் கொள்ளையடிக்கிறேனா அல்லது நான் மக்களுக்கு இலஞ்சம் கொடுக்கிறேனா?

கோலாலம்பூரில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் மக்களுக்கு இலஞ்சம் கொடுப்பது உண்மையானால், அதை நிரூபியுங்கள், என்னை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்,” என்றார்.

பி.என். அரசாங்கம் இதற்கு முன்பு செய்யாத பல விஷயங்களை, பி.எச். செய்திருப்பதாக மகாதீர் கூறினார்.

“(பி.எச். மற்றும் பி.என்.-க்கு இடையில்) எந்த வித்தியாசமும் இல்லை என்று பார்வையற்றோர், காது கேளாதோர் மற்றும் அறிவற்றவர்கள் மட்டுமே கூறுவார்கள்.

“நாங்கள் பிரதமரின் பதவி காலத்தை இரண்டு தவணையாக மட்டுப்படுத்த உள்ளோம். (முன்னாள் பிரதமர்) நஜிப் ரசாக் அதைச் செய்தாரா?

“மக்கள் அனுபவிக்கும் நல்ல விஷயங்களை அவர்கள் பாராட்டுவதில்லை, மோசமான விஷயங்களை மட்டுமே அவர்கள் பார்க்கிறார்கள், ஏனெனில் அவர்கள் அரசாங்கத்தை வீழ்த்த விரும்புகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

பி.எச். அரசாங்கத்தை வீழ்த்த முயற்சிகள் நடக்கிறது எனும் டிஏபி மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங்கின் குற்றச்சாட்டை மகாதீர் ஒப்புக்கொண்டார்.

“இதற்கு முன்னர், செய்திகள் வெளியிடுவதில் கட்டுப்பாடுகள் இருந்தன என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் என் நண்பர்களாக இருந்தால், நஜிப்பின் காலத்தில் உங்களுக்கு பல ரூபங்களில் பிரச்சினைகள் வரும். ஆனால் இப்போது, அப்படியெல்லாம் இல்லை.

“நீங்கள் எவ்வளவு முட்டாளாக இருக்க முடியும்? நான் என்ன அப்படியா இருக்கிறேன்?” என்றார்.