சர்ச்சைக்குரிய மதப் போதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கின் வழக்கறிஞரிடம் இருந்து, பினாங்கு துணை முதல்வர் II பி. இராமசாமிக்கு, ஒரு சட்ட வழக்குக் கடிதம் கிடைத்துள்ளது.
அந்த டிஏபி தலைவர், 48 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையேல், அவர்மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று ஜாகிர் அக்கடிதத்தில் கோரியுள்ளார்.
இராமசாமி மட்டுமின்றி, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்திஸ் முனியாண்டி மற்றும் முன்னாள் தூதர் டென்னிஸ் ஜே இக்னேஷியஸ் ஆகியோருக்கும் இதே போன்ற கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஜாகிர் நாயக் சார்பாக, அக்பெர்டின் & கோ நிறுவனத்தால், இன்றையத் தேதியிடப்பட்டக் கடிதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம், இதேபோன்ற வழக்குக் கடிதம் மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் மீது தாக்கல் செய்யப்பட்டது – அவர் ஜாகீரை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளத் தயார் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர்களுக்கு எதிராக, குற்றவியல் சட்டம் மற்றும் தேசத் துரோகச் சட்டத்தின் கீழ், ஜாகிர் போலிஸ் புகாரும் தாக்கல் செய்துள்ளார்.