தாய்மொழிப் பள்ளிகளை ஒழிப்பது ‘கெட்ட சொப்பனமாக” அமையும்- கைரி

ஒரே தேசிய பள்ளி முறையை அமைப்பதற்கு வாய்ப்பு இருந்தது ஆனால் அது பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை. இப்போது தாய்மொழிப் பள்ளிகளை அகற்ற முனைந்தால் குழப்பம்தான் விளையும் என்கிறார் ரெம்பாவ் எம்பி கைருடின் ஜமாலுடின்.

“1957 அல்லது 1963-இல் ஒரே கல்விமுறையை அமைத்திருக்கலாம். ஆனால், அப்போது தாய்மொழிப் பள்ளிகளுக்கு இடமளித்து விட்டோம்.

“இடமளித்த பிறகு அதை எடுப்பது சிரமம்”. முன்னாள் கல்வி அமைச்சரான கைரி நேற்று ஒரு கருத்தரங்கில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்தபோது அவ்வாறு கூறினார்.

தாய்மொழிப் பள்ளிகளை ஒழிப்பதைவிட தேசியப் பள்ளிகளை மலேசியர் அனைவரும் அவர்களின் பிள்ளைகளை விரும்பி அனுப்பும் பள்ளிகளாக தரம் உயர்த்துவதற்குக் கவனம் செலுத்துவதே முக்கியம் என்றாரவர்.

“இன்று யாராவது ஒருவர் சீன, தமிழ்ப் பள்ளிகள் வேண்டாம் ஒரே கல்விமுறை போதும் என்று கூறினால் இன்னொருவர் எழுந்து ‘மதராசாக்கள், ஸ்கோலா பொண்டோக் (தனியார் இஸ்லாமியப் பள்ளிகள்) இருக்கின்றனவே, அவற்றையும் அல்லவா எடுக்க வேண்டும்?’ என்பார்.

“அப்புறம் அனைத்துலகப் பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்குப் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோரும் இருக்கவே செய்கிறார்கள்”., என்று கைரி கூறினார்.