ஜாகிர்: மனத்தை நோகடித்திருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்; நான் இனவாதி அல்ல

சமயப் போதகர் ஜாகிர் நாய்க் முஸ்லிம்- அல்லாதார் மனத்தைப் புண்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக இன்று ஓர் அறிக்கை விடுத்திருந்தார்.

ஜாகிர் தான் இனவாதி அல்ல என்றும் தன்னுடைய கூற்றுகள் “தேர்ந்தெடுக்கப்பட்டுத் திரித்துக் கூறப்பட்டுள்ளன” என்றும் கூறினார்.

“நான் அமைதியை விரும்பும் மனிதன். குர் ஆனும் அதைத்தான் வலியுறுத்துகிறது. உலக முழுவதும் அமைதியைப் பரப்புவதே என் பணி. அவப்பேறாக, என்னில் குறைகாண்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள், அவர்கள் என் பணியைச் செய்ய விடாமல் தடுக்கிறார்கள்.

“கடந்த சில நாள்களாக, நான் இந்நாட்டில் இன இணக்கத்தைக் கெடுப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். என்னைக் குறை சொல்பவர்கள் சில வாக்கியங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை வேறுவிதமாக திரித்துக் கூறுகிறார்கள்”, என்றவர் அந்த அறிக்கையில் கூறினார்.

நேற்று ஜாகிர் விசாரணைக்காக புக்கிட் அமானுக்கு அழைக்கப்பட்டிருந்தார். 10 மணி நேரத்துக்குமேல் அவரிடம் விசாரணை செய்யப்பட்டது. பின்னிரவு மணி 1.30 அளவில்தான் அவர் போலீஸ் தலைமையகத்திலிருந்து புறப்பட்டதாக அவரின் வழக்குரைஞர் அக்பர்தின் அப்துல் காடிர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.