ஜாகிரை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார்- இராமசாமி

பினாங்கு துணை முதலமைச்சர் II பி.இராமசாமி, சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜாகிர் நாய்க்கை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராக இருக்கிறார்.

“வழக்கு விசாரணைக்கு வரும்போது அவர் இங்கு இருக்க வேண்டும். அதிகாரிகளிடமிருந்து தப்பி ஓடிக் கொண்டிருப்பவரும் சமயப் போதகருமான ஜாகிர் நாய்க்குடன் நேருக்குநேர் மோத நான் தயார்”, என்று இராமசாமி இன்று முகநூலில் பதிவிட்டிருந்தார்.

தன் பேச்சு மனத்தைப் புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக ஜாகிர் அறிக்கை வெளியிட்டிருப்பத்தைச் சுட்டிக்காட்டிய இராமசாமி தன்னைப் பொறுத்தவரை மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்றார்.

“செய்த தவறுகளுக்கு அவர் மன்னிப்பு கேட்டார். அதுவும் காலம் கடந்து. ஆனால், நான் அவரிடம் மன்னிப்பு கேட்கப் போவதில்லை. ஜாகிரைப் பொறுத்தவரையில், என் அகராதியில் ‘மன்னிப்பு’ என்ற சொல்லே இல்லை”, என்றார்.

ஜாகிர், நேற்று இராமசாமிக்கும் கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் முனியாண்டி, முன்னாள் தூதர் டெனிஸ் ஜே . இக்னேஷியஸ் ஆகியோருக்கும் 48 மணி நேரத்துக்குள் மன்னிப்பு கேட்டுக் கொண்டு ஒரு நியாயமான தொகையை இழப்பீடாகக் கொடுக்க வேண்டும் தவறினால் அவதூறு வழக்கு தொடுக்கப்படும் என்று தன் வழக்குரைஞர் வழி கோரிக்கைக் கடிதம் அனுப்பி இருந்தார்.

கடந்த வாரம் இதேபோன்றதொரு கடிதம் மனித வள அமைச்சர் எம்.குலசேகரனுக்கும் அனுப்பப் பட்டது. அமைச்சர் இந்தியாவில் பிறந்த ஜாகிரை நீதிமன்றத்தில் சந்திப்பதாகக் கூறிவிட்டார்.