மைசலாம் ‘திடீர் பணக்காரராகும் திட்டமா? அப்பட்டமான பொய்- அமைச்சு சாடல்

பத்திரிகை ஒன்றில் மைசலாம்(MySalam) “திடீர் பணக்காரராகும் திட்டம்” என்று வருணிக்கப்பட்டிருப்பதை நிதி அமைச்சு சாடியுள்ளது.

சினார் ஹரியான் நாளேட்டில் அங்காத்தான் கார்யாவான் நேசனலிஸ் (அகார்) தலைவர் அப் ஜாலில் பக்கார் அவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.

“சினார் ஹரியான் கட்டுரையில் வெளியிடப்பட்ட அக்குற்றச்சாட்டு அப்பட்டமான பொய்”, என நிதி அமைச்சு இன்று ஓர் அறிக்கையில் கூறியது.

“கட்டுரையில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள், குற்றஞ்சாட்டியவர் அத்திட்டத்தின் நன்மைகளை அறிந்திருக்கவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது”, என்றந்த அறிக்கை குறிப்பிட்டது.

மைசலாம் என்பது ஷியாரியாவுக்கு இணக்கமான ஒரு காப்புறுதித் திட்டமாகும். இது மக்களுக்கு நன்மை அளிக்கும் திட்டமே தவிர தனியார் துறைக்கு நன்மையாக அமைந்த திட்டம் அல்ல என்று அமைச்சு விளக்கியது.

“இந்த நலக் காப்புத் திட்டம் ஆதாய-நோக்கமற்ற ஒரு தகாபுல் திட்டமாகும். குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவில் உள்ளவர்களுக்காக அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள ஒரு திட்டம் இது. இதன்வழி 3.8 மில்லியன் பேர் பயனடைவர்”.

மைசலாம் திட்டம் ஜனவரியில் தொடங்கப்பட்டது. பி40 பிரிவில் உள்ளவர்கள் முக்கியமான 36 வகை நோய்களில் ஏதாவது ஒன்றால் பாதிக்க்ப்பட்டிருந்தால் அவர்களுக்கு உதவி வழங்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் உதவி பெறத் தகுதி பெற்றவர்களுக்கு ஒரு தடவை மட்டும் ரொக்க உதவியாக ரிம8,000 கொடுக்கப்படும். அத்துடன் நாளொன்றுக்கு ரிம50 மருத்துவ மனை அலவன்சும் உண்டு. இந்த அலவனஸ் ஆண்டுக்கு ரிம700 வரை- வழங்கப்படும்.