தேசிய வகைத் தொடக்கப்பள்ளிகளில், நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு ‘க்ஹாட்’ அல்லது ஜாவி எழுத்து கற்பிக்கும் விஷயத்தில், டோங் ஜோங்-உடன், மேலும் எட்டு அமைப்புகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.
பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தின் (பிஐபிஜி) ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே, இந்தப் பாடம் பள்ளிகளில் நடத்தப்படும் என்று அமைச்சரவை சமீபத்தில் முடிவு செய்ததன் அடிப்படையில், இந்த அதிருப்தியை அவர்கள் வெளிபடுத்தியுள்ளனர்.
டோங் ஜோங்கின் கூற்றுப்படி, இந்த முடிவு பல சிக்கல்களை ஏற்படுத்தும், மேலும் அதனை முழுமையாகச் செயல்படுத்த முடியாமல் போகலாம்.
“காரணம், சபா மற்றும் சரவாக்கில் உள்ள பெரும்பாலான சீனப் பள்ளிகளில், பி.ஐ.பி.ஜி.-கள் இல்லை,” என்று அந்த அமைப்பு, மற்ற எட்டு அமைப்புகளுடன் இணைந்து, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சீனப் பள்ளி ஆசிரியர்கள் சங்கம் (ஜியாவோ ஸோங்), மலேசிய சீனர்கள் சங்கம் (ஹுவா ஸோங்), மலேசிய முன்னாள் சீன மாணவர் சங்கம், தைவான் மலேசிய பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம், மெர்டேக்கா யூனிவர்சிட்டி பெர்ஹாட், எல்.எல்.ஜி. கலாச்சார மேம்பாட்டு மையம், மலேசிய சீன மொழி கவுன்சில் மற்றும் மலேசிய சீனப் பல்கலைக்கழக மற்றும் கல்லூரிகளின் முன்னாள் மாணவர்கள் சங்கம் ஆகியவை டோங் ஜோங்கை ஆதரித்துள்ளன.
தேசிய வகைப் பள்ளிகளில், ஜாவி கற்பித்தல் குறித்த முடிவை, அங்குள்ள பள்ளி அறங்காவலர் குழுவிடம் (எல்.பி.எஸ்) சமர்ப்பிக்க வேண்டும் என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது, ஏனெனில், எல்.பி.எஸ்.-இல் பி.ஐ.பி.ஜி. பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் அங்கத்துவம் பெற்றுள்ளனர் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
தேசிய வகைப் பள்ளிகளில் மலாய் பாடத்தின் நோக்கம், மாணவர்களிடையே மலாய் மொழி புலமையை அதிகரிப்பதாகும். ஆனால், இந்த ஜாவி எழுத்து பயிற்றுவித்தல் எந்த வகையிலும் அதற்கு உதவாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
“கல்வி அமைச்சு இதுபோன்ற முடிவுகளை எடுப்பதற்கு முன்னர், டோங் ஜியாவ் ஸோங் மற்றும் தமிழ்க்கல்வி தொடர்புடைய அமைப்புகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும்.
“பொது மக்களின் கவலை மற்றும் சந்தேகங்களை ஒழிப்பதற்கும், சீன மற்றும் தமிழ் தேசிய வகைப் பள்ளிகளின் பண்பு மற்றும் அடையாளங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் இது முக்கியம்,” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.