போலீசில் 100க்கு மேற்பட்ட போதைப் பொருள் பித்தர்கள்: ஐஜிபி அதிர்ச்சி

ஆகஸ்ட் 13 தொடங்கி போலீஸ் படையில் மேற்கொள்ளப்பட்டுவரும் போதைப் பொருள் பழக்கம் உள்ளவர்க்ளைக் கண்டுபிடிக்கும் ஆய்வில் 100க்கு மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் போதைப் பழக்கம் உள்ளவர்கள் என்பது தெரிய வந்துள்ளதாக இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் அப்துல் ஹமிட் படோர் கூறினார்.

ஓப்ஸ் புலு டெவல் நடவடிக்கையின்கீழ் போலீஸ் அதிகாரிகளிடம் சிறுநீர் பரிசோதனை செய்து பார்த்ததில் அவர்களுக்குப் பல்வேறு போதைப் பொருள் பழக்கம், குறிப்பாக ஷியாபு உட்கொள்ளும் பழக்கம் இருப்பது தெரிய வந்தது. அதிலும் 100க்கு மேற்பட்டவர்களுக்கு அப்பழக்கம் உண்டு என்ற செய்தி அறிந்து அதிர்ந்து போனதாக ஐஜிபி கூறினார்.

“சட்டத்தைச் செயல்படுத்தும் பொறுப்பைக் கொண்டுள்ள போலீஸ் அதிகாரிகளே இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் நாடு என்னாவது?”, என்றவர் கவலை தெரிவித்தார்.

போதைப் பொருள் பழக்கமுள்ள போலீஸ் அதிகாரிகளை அடையாளம் காணும் நடவடிக்கை தொடரும் என்றும் அவர் சொன்னார். அந்நடவடிக்கையை நிறுத்த வேண்டாம் என்று போதைப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குனருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

போதைப் பொருள் பழக்கம் உள்ளவர்களே கையூட்டுப் பெறுதல், மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற தீச்செயல்களிலும் ஈடுபடுகிறார்கள் என்றவர் சந்தேகிக்கிறார். அதனால் பாதிக்கப்படுவோர் பெரும்பாலும் அந்நிய தொழிலாளர்களே என்றாரவர்.

போதைப் பொருள் பழக்கம் உள்ளவர்களுக்கு நிறைய பணம் தேவைப்படும். போலீஸ்காரர்களுக்குக் குறைவான சம்பளம்தான் என்பதால் சட்டவிரோதமான வழிகளில் பணம் தேட முயல்கிறார்கள் என்றாரவர்.