லைனஸ் எதிர்ப்பு பேரணி : ஐவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்

கடந்த ஞாயிறு அன்று, குவாந்தான், தாமான் கெலோராவில், நடந்த லைனஸ் எதிர்ப்பு பேரணி தொடர்பில் விசாரிக்க, போலிசார் ஐந்து நபர்களை அழைத்துள்ளனர்.

இதனை, செமாம்பு சட்டமன்ற உறுப்பினர் லீ சென் சூங் மற்றும் ‘சேவ் மலேசியா, ஸ்தோப் லைனஸ்’ (மலேசியாவைக் காப்பாற்றுங்கள், லைனஸை நிறுத்துங்கள் –எஸ்.எம்.எஸ்.எல்.) இயக்கத்தின் தலைவர் தான் புன் தீட் இருவரும் உறுதிபடுத்தியுள்ளனர்.

இவர்கள் இருவரையும் தவிர்த்து, தெருந்தோம் சட்டமன்ற உறுப்பினர், சிம் சோன் சியாங், எஸ்.எம்.எஸ்.எல். இயக்கத்தின் சட்ட ஆலோசகர் ஹோன் காய் பிங் மற்றும் அதன் செயலாளர் ச்சூ செங் போங் ஆகியோரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

குவாந்தான் போலிஸ் தன்னை அழைத்து, பேரணி தொடர்பாக விளக்கமளிக்க இன்று வரச் சொன்னதாக லீ தெரிவித்தார். எனினும். தற்போது தான் கோலாலம்பூரில் இருப்பதால், நாளை காவல் நிலையம் செல்லவிருப்பதாக அவர் சொன்னார்.

தாமான் கெலோராவைப் பயன்படுத்த, ஏற்பாட்டாளர்கள் செய்த விண்ணப்பத்திற்கு, குவாந்தான் நகராட்சி மன்றம் (எம்.பி.கே) பதிலளிக்கவில்லை என்று லீ தெரிவித்தார்.

“ஒன்று கூடும் சுதந்திரமானது, மனித உரிமை என்று அரசியலமைப்பு உத்தரவாதம் அளித்துள்ளது என்று நான் நினைக்கிறேன்.

“எம்.பி.கே. எந்தவொரு பதிலும் அளிக்காத பட்சத்தில், அந்தப் பொது இடத்தைப் பயன்படுத்த வரி செலுத்தும் மக்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் உரிமை உண்டு.

“எம்.பி.கே. ஒத்துழைப்பு நல்க வேண்டுமே ஒழிய, நிலைமையை சிக்கலாக்கக்கூடாது. விண்ணப்பத்தை நிராகரிக்க காவல்துறை பல காரணங்களைப் பயன்படுத்தக்கூடாது,” என்று அந்தப் பிகேஆர் பிரதிநிதி மலேசியாகினியிடம் கூறினார்.