தேசிய எழுத்தாளர் சங்கம் (பேனா) இளைஞர், விளையாட்டு அமைச்சு ஹரி சுக்கான் நெகரா நிகழ்வுக்கு “மலேசியா ஸ்போர்ட்ஸ் சேலஞ்ச்” என்று பெயரிட்டிருப்பதைக் குறை கூறியது.
அதன் தலைவர் முகம்மட் சாலீ ரஹ்மான், அரசாங்க நிகழ்வு ஒன்றுக்கு ஆங்கிலத்தில் பெயரிட்டிருப்பதற்குக் கடும் வார்த்தைகளால் கண்டனம் தெரிவித்தார்.
“சுதந்திரம் பெற்று 62ஆம் ஆண்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளையில் மலாய் மொழியின் உயர்நிலையைக் காப்பதில் மலேசியா வலுவிழந்து வருகிறது. இப்போது ஹரி சுக்கான் நெகாரா என்பதற்குப் புதிய பெயர் கொடுக்கப்பட்டுள்ளது- மலேசியா ஸ்போர்ட்ஸ் சேலஞ்ச் என்று.
“அரசாங்க நிகழ்வுகளுக்கு மலாய் மொழியைப் பயன்படுத்தப்படுவதே முறையாகும்”, என்றாரவர்.
பக்கத்தான் ஹரப்பான் “தேசியவாதிகளுக்குச் சவால் விடுக்க வேண்டாம்” “நாட்டை நாசப்படுத்த வேண்டாம்” என்று முகம்மட் சாலீ எச்சரித்தார்.
“நாடு ஏற்கனவே குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும்போது அரசாங்கம் நிலைமையை மேலும் மோசமாக்கக் கூடாது. இனங்களுக்கிடையில் பதற்றம் மிகுந்துள்ள நிலையில் அரசாங்கம் தேசியவாதிகளின் உணர்வுகளை உரசிப் பார்க்கக் கூடாது”, என்றாரவர்.
முன்பு ஹரி சுக்கான் நெகரா என்ற பெயரில் ஒரு நாள் மட்டுமே கொண்டாடப்பட்ட விளையாட்டு நிகழ்ச்சித்தான் இப்போது மலேசியா ஸ்போர்ட்ஸ் சேலாஞ்ச் என்ற பெயரில் நடைபெறவுள்ளது. இப்போது அது அக்டோபர் மாதம் முழுக்க விளையாட்டுகளுக்கும் உடலைத் திடமாக வைத்துக்கொள்வத்ர்கும் முக்கியத்துவம் அளித்து மாநில, மாவட்ட நிலைகளிலும் கொண்டாடப்படும்.
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அக்டோபர் 12-இல் இந்நிகழ்ச்சியைத் தொடக்கி வைப்பார்.