பிகேஆர்: அன்வார் வேண்டுமென்றே பிரதமரின் கூட்டத்தைத் தவிர்க்கவில்லை

பிகேஆர் அதன் தலைவர் அன்வார் இப்ராகிம் பக்கத்தான் ஹரப்பான் கட்சித் தலைவர்கள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டைச் சந்திக்கும் கூட்டத்தில் கலந்துகொள்வதை வேண்டுமென்றே தவிர்த்தார் என்று கூறப்படுவதை மறுக்கிறது.

அவ்வாறு கூறியவர் பெர்சத்து கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான கைருடின் அபு . கெட்ட நோக்கத்துடன்தான் அவர் அவ்வாறு கூறியிருக்க வேண்டும் என பிகேஆர் தொடர்பு இயக்குனர் ஃபாஹ்மி பாட்சில் இன்று ஓர் அறிக்கை விடுத்தார்.

கைருடின் குறிப்பிடும் அக்கூட்டம் 2018-இல் அமைச்சரவை அமைக்கப்பட்டதில் சம்பந்தப்பட்ட ஹரப்பான் தலைவர்கள் கலந்துகொள்ளும் ஒரு கூட்டம் என்று ஃபாஹ்மி கூறினார்.

அரசாங்க விவகாரங்கள் பற்றியும் அமைச்சுகளின் பொறுப்புகள் பற்றியும் தலைவர்களின் கருத்தறிவதற்காகக் கூட்டப்பட்ட கூட்டம் அது.

“அதில் பிகேஆரைப் பிரதிநிதித்து டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் கலந்து கொண்டார்”, என ஃபாஹ்மி தெரிவித்தார்.

நேற்று அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர் அக்கூட்டம் நடந்ததாகத் தெரிகிறது.

நேற்று மாலையிலிருந்து எல்லாச் சமூக ஊடகங்களிலும் அன்வார் பிரதமருடனான கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை, வேண்டுமென்றே தவிர்த்து விட்டார் என்று குறைகூறப்பட்டு வருகிறது.

இன்று காலை ஹரப்பான் கட்சிகள் எதிலும் இல்லாத கைருடின், அன்வார் அகங்காரம் கொண்டவர் என்றும் அதனால்தான் அக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்றும் குற்றஞ்சாட்டி இருந்தார்.