மலேசிய சோசலிசக் கட்சியின் (பிஎஸ்எம்) தேசியத் தலைவர் டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார் தேவராஜ், தனித்து வாழும் பெற்றோர் உட்பட, குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு (பி40) வழங்கப்படும் உதவித் தொகையை (பந்துவான் சாரா ஹிடுப் – பி.எஸ்.எச்.) நிறுத்தும் முன், மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
முந்தைய அரசாங்கத்திடம் இருந்து, 1மலேசியா மக்கள் உதவிநிதியைப் பெற்ற பலருக்கு, பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) அரசாங்கம் அறிமுகப்படுத்தியப் புதியத் திட்டத்தின் கீழ் நிதியுதவி நிறுத்தப்பட்டுவிட்டதாக, பொது மக்களிடமிருந்து தங்களுக்குப் பல புகார்கள் வந்துள்ளதாக டாக்டர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
“நாடு முழுவதும் இருந்து, எங்களுக்குப் பல புகார்கள் வந்துள்ளன. பி.எஸ்.எச். கொடுப்பது, வீணான செயல் என்று அரசாங்கம் நினைத்தால், அது அப்படி இல்லை என்று என்னால் சொல்ல முடியும்.
“சரியான வருமானம் அல்லது வேலை இல்லாததால் ஏராளமான குடும்பங்கள் இன்னும் உதவித் தொகையை நம்பியே இருக்கின்றன,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
முன்னதாக, பாதிக்கப்பட்ட பி40 குழுவினருடன் சேர்ந்து, உதவித் தொகை நிறுத்தப்பட்டதைக் கண்டித்து, ஈப்போவில், மாநில உள்நாட்டு வருவாய் வாரிய அலுவலகம் முன் பி.எஸ்.எம். போராட்டம் நடத்தியது.
அக்குழுவைப் பிரதிநிதித்துப் பேசிய டாக்டர் ஜெயக்குமார், உதவித் தொகை நிறுத்தப்பட்டதற்கு அரசாங்கம் அளித்த காரணத்தை ஏற்க முடியவில்லை என்று கூறினார்.
“60 வயதுக்குக் குறைவான மற்றும் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளைப் பெற்றிறாத தனித்து வாழும் பெற்றோர், இனி உதவித்தொகை பெறத் தகுதியற்றவர்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள். இது நியாயமற்றது.
“60 வயதிற்குக் குறைவான எத்தனை தனித்து வாழும் பெற்றோரால் வேலைக்குச் செல்ல முடிகிறது? அவர்கள் நோய்வாய் பட்டிருக்கலாம், நமக்குத் தெரியாது. 18 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகள் நிலையான ஒரு வேலையில் அமர்ந்து, சம்பாதித்து கொண்டிருப்பார்கள் என்று நாம் உறுதியாக சொல்ல முடியாது. நமக்கு தெரிந்து, வேலையில்லாத எத்தனையோ இளைஞர்கள் இன்று நாட்டில் இருக்கிறார்கள்,” என்று அவர் விளக்கமளித்தார்.
மலேசியத் தொழில்நிறுவன ஆணையத்தின் (எஸ்எஸ்எம்) கீழ் பதிவு செய்துள்ள பி40 குழுவினரும், பிஎஸ்எச் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்றும் டாக்டர் ஜெயக்குமார் கூறினார்.
“எஸ்.எஸ்.எம். கீழ் பதிவுசெய்யப்பட்ட அனைவரும் பணக்கார வணிகர்கள் அல்ல என்பதை அரசாங்கம் உணர வேண்டும். சந்தைகள் மற்றும் சாலையோரங்களில் சிறிய ஸ்டால்களைத் திறக்க இந்த நபர்கள் எஸ்.எஸ்.எம். கீழ் பதிவு செய்கிறார்கள். காய்கறிகள், ரொட்டி சனாய் மற்றும் நாசி லெமாக் போன்றவற்றை விற்பனை செய்வதன் மூலம் அவர்கள் மாதத்திற்கு RM1,500 சம்பாதிக்க முடியாது,” என்று அவர் கூறினார்.
“இந்த உதவித் திட்டத்திலிருந்து ஏழை இல்லாதவர்களைக் கைவிட நிதி அமைக்சு விரும்புகிறது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். RM500,000-க்கும் அதிகமான சொத்துக்களை வைத்திருக்கும் நபர்கள் அல்லது 2000 சி.சி.-க்கு மேல் உள்ள கார்களையோ அல்லது 500 சி.சி.-க்கு மேல் உள்ள மோட்டார் சைக்கிள்களையோ வைத்திருக்கும் நபர்களை அவர்கள் கைவிட்டால் நாங்கள் எதிர்க்க மாட்டோம், ஆனால், ஏற்கனவே ஏழ்மையானவர்களை ஏன் இந்தத் திட்டத்திலிருந்து கைவிட வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.
பாதிக்கப்பட்ட பி40 குழுவினர், மீண்டும் அத்திட்டத்தின் பயனை அனுபவிக்கும் வகையில், அவர்களின் நிலையை உடனடியாக மறுஆய்வு செய்து, அரசாங்கம் நிர்ணயித்துள்ள நிலையான இயக்க முறையை மாற்றுமாறு நிதியமைச்சர் லிம் குவான் எங்கை ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார்.