டோல் இல்லாத நெடுஞ்சாலை : மக்கள் புரிந்துகொள்வார்கள் என பிரதமர் நம்பிக்கை

பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் அறிக்கையில் உள்ள உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில், சிரமங்களை எதிர்கொண்டுள்ள பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது, நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளை அகற்றுவதில் அரசாங்கம் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இன்று புத்ராஜெயாவில், செய்தியாளர்களுடன் பேசிய மகாதீர், சுங்கச்சாவடியை அகற்றுவதற்கான ஒரே வழி, அதன் சலுகையாளர்களிடமிருந்து நெடுஞ்சாலைகளை வாங்குவதே ஆகும் என்றார்.

இதற்கு ஒரு பெரிய தொகை செலவாகும் என்றும் அவர் கூறினார்.

“இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், அந்நிறுவனங்களைக் கட்டணங்களை வசூலிக்க நாம் அனுமதிக்கவில்லை என்றால், நெடுஞ்சாலைகளை வாங்க அவர்கள் பயன்படுத்திய நிதியை எவ்வாறு அவர்கள் மீட்டெடுக்க முடியும்? இதுதான் பிரச்சினை.

“அனைத்து நெடுஞ்சாலைகளையும் பராமரிக்க வேண்டும், அகலப்படுத்த வேண்டும், மேலும் பாதைகளை அதிகரிக்க வேண்டும் – இவை அனைத்திற்கும் பணம் தேவை,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, இச்செலவுகளை ஈடுகட்டவே டோல் வசூலிக்கப்படுவதாக மகாதிர் கூறினார்.

14-வது பொதுத் தேர்தலுக்கு முன்னர், பி.எச். அரசாங்கமானால் டோல் வசூலிக்காது என்று உறுதியளித்ததே நிலைமையைக் கடினமாகிவிட்டது என்ற அவர், “நெடுஞ்சாலைகளை அரசாங்கம் வாங்கினால், அதன் பராமரிப்புக்கு அதிகம் செலவிட வேண்டி வரும். இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்,” என்றார்.