‘பிரதமர், அமைச்சரவை-உடன் ஒத்துப்போகாத அமைச்சர்கள் பதவி விலகுங்கள்’

அமைச்சரவை மற்றும் பிரதமரின் முடிவை மதிக்காத அமைச்சர்கள் அல்லது துணை அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்பதை அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களும் ஒருசேர ஒப்புக்கொள்கிறார்கள்.

அரசாங்கத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள அரசியல் தலைவர்கள், அமைச்சரவை மற்றும் டாக்டர் மகாதீர் முகமதுவின் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று அமானா கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் சானி ஹம்சா கூறினார்.

“இது ஒழுக்கம் மற்றும் நேர்மை தொடர்பான விஷயம், ஓர் அமைச்சராக அல்லது துணை அமைச்சராக நியமிக்கப்படும்போது, பொதுமக்களிடையே கூறப்படும் விஷயம் கணக்கில் எடுத்துகொள்ளப்பட வேண்டும்.

“நாம் அமைச்சரவை முடிவுகளுக்குக் கட்டுப்பட்டுள்ளோம், எதிர்க்கட்சியாகவும், தற்போது அரசாங்கமாகவும் நமது பங்கை வேறுபடுத்த தெரிய வேண்டும்.

“ஒத்துப்போகாத அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்,” என்று அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

இதனையே வலியுறுத்திய பெர்சத்து உச்சமன்ற உறுப்பினர், முகமட் ராஃபிஃ நைஜாமொஹிட்டின், அமைச்சரவையின் முடிவையும் பிரதமரையும் பகிரங்கமாகப் பொதுவில் விமர்சிப்பது நியாயமற்றது என்றார்.

“பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களுக்கு அரசியல் ஒழுக்கம் இருக்க வேண்டும், துணை அமைச்சர்களுக்கு அமைச்சர்களுடன் கருத்து வேறுபாடு இருக்கக்கூடாது, அதுபோலவே அமைச்சர்களும் பிரதமருடன் கருத்து வேறுபடக்கூடாது,” என்றார் அவர்.

ஆகஸ்ட் 6-ம் தேதி, டிஏபி முன்வைத்த இரண்டு விஷயங்கள், தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு முரணாக இருந்ததைத் தொடர்ந்து, அமைச்சரவையில் உள்ள அனைத்து டிஏபி பிரதிநிதிகளையும் இராஜினாமா செய்யுமாறு பாஸ் வலியுறுத்தியது.

அவை, சர்வதேச மதப்போதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கின் பிரச்சினை மற்றும் சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளில் மலாய் மொழி பாடத்தில் ஜாவி எழுத்து அறிமுகம் தொடர்பான பிரச்சினைகள் என பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் தெரிவித்தார்.

டிஏபி தனது கட்சியின் நலன்களில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது என்றும், அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்புணர்வைப் பலப்படுத்த அது விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.

இவர்களைப் போலவே, பிகேஆர், அம்னோவைச் சேர்ந்த சில தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லொக்மான் நூர் அடாம், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தத் தவறிய டிஏபியின் பலவீனத்தை மறைக்கவும், மலாய்க்காரர்களின் ‘ஹீரோ’-வாக பெர்சத்து தன்னைக் காட்டிக்கொள்ளவும், அவையிரண்டும் இணைந்து நடத்தும் நாடகம் இது என லொக்மான் கூறியுள்ளார்.

“டாக்டர் மகாதீர் மற்றும் டிஏபி நடத்தும் அரசியல் நாடகத்தில் மலேசியர்கள் சிக்கிக் கொள்ள வேண்டாம்,” என அவர் கேட்டுக்கொண்டார்.