Dego Ride மலேசியாவில் வாடகை மோட்டார்-சைக்கிள் சேவைக்குப் பச்சை விளக்குக் காட்டிய அரசாங்கம் அச்சேவையை வழங்க உள்நாட்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியது.
“அழைப்பு வாகனச் சேவைச் சந்தையில் டேகோ ரைட்டுக்கும் ஓர் இடம் கொடுக்கப்பட வேண்டும் என்பதே என் விருப்பமாகும்”, என்றார் நபில் ஃபிசல் பமாதாஜ். நபில்தான் மலேசியாவில் டேகோ ரைட் என்ற பெயரில் வாடகை மோட்டார்-சைக்கிள் சேவையை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர்.
வாடகை மோட்டார்-சைக்கிள் சேவைக்கு அனுமதியளிக்கும் அரசாங்க முடிவை நபில் வரவேற்றார்.
“அதன் வழி கொஜெக் மட்டுமல்ல டேகோ ரைட்டும் அதன் சேவையை மறுபடியும் தொடங்கலாம் என்பதற்குப் பச்சை விளக்குக் காட்டப்பட்டுள்ளது”, என்று கூறிய அவர், வாடகை மோட்டார்-சைக்கிள் சேவைக்குப் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றும் நம்புகிறார்.
வாடகை மோட்டார்- சைக்கிள் சேவையை அறிமுகப்படுத்தும் பரிந்துரைக்கு அமைச்சரவை ஆகஸ்ட் 21-இல் கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்தது. போக்குவரத்து அமைச்சு அத்திட்டம் பற்றி ஒரு மாதத்துக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்றும் பணிக்கப்பட்டுள்ளது.
2017-இலேயே வாடகை மோட்டார்-சைக்கிள் சேவைத் திட்டம் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், முந்தைய பிஎன் அரசாங்கம் பாதுகாப்புக் காரணங்களுக்காக அதற்குத் தடை விதித்தது.