எம்பி சொல்லியும் விடுப்பில் செல்ல மறுக்கும் பால் யோங்

பேராக்   எக்ஸ்கோ உறுப்பினர் பால் யோங்கிடம் அவரது வழக்கு முடியும்வரை விடுப்பில் செல்லுமாறு பேராக் மந்திரி புசார் அறிவுறுத்தியும் மறுக்கிறீர்களாமே என்று செய்தியாளர்கள் கேட்டபோது ஆத்திரமடைந்தார்.

“நான் இன்னமும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர். நான் மக்களின் பிரதிநிதி. நான் குற்றவாளி என்று இன்னும் தீர்ப்பளிக்கப்படவில்லை”, என்றவர் செய்தியாளர்களிடம் காட்டமாக பதிலளித்தார்.

அப்படியானால் அவர் செய்யும் பணியைத் தொடரப் போகிறாரா என்று வினவியதற்கு, “நிச்சயமாக! மக்கள் எனக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நான் சேவையாற்ற வேண்டும். அதை ஏன் நிறுத்த வேண்டும்? எதற்காக விடுப்பில் செல்ல வேண்டும்”, என்று திருப்பிக் கேட்டார்.

முன்னதாக, துரோனோ சட்டமன்ற உறுப்பினருமான பால் யோங்மீது இந்தோனிசியப் பணிப்பெண்ணைப் பாலியல் பலத்காரம் செய்ததாக ஈப்போ நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

குற்றச்சாட்டை மறுத்து அவர் விசாரணை கோரினார். நீதிபதி அவரை ஒருவர் உத்தரவாதத்துடனும் 15,000 ரிங்கிட் பிணையிலும் விடுவித்தார்.

செப்டம்பர் 24-ஆம் தேதி அவரது வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்.

Leave a Reply