பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் பால் யோங்மீதான பாலியல் பலாத்கார வழக்கைச் சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) கைவிட வேண்டும் என்று அவரின் வழக்குரைஞர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவ்வழக்கு தொடர்பில் புருவாஸ் எம்பி ங்கே கூ காம் கொடுத்துள்ள புதிய ஆதாரங்களின் அடிப்படையில் அவர்கள் அந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.
நேற்று ங்கே செய்த போலீஸ் புகாரில் கடுமையான குற்றச்சாட்டுகள் அடங்கியுள்ளன என்றும் அவை தன் கட்சிக்காரரின் வழக்குத் தொடர்பானவை என்றும் வழக்குரைஞர் ராம்கர்பால் சிங் கூறினார்.
“அதை முழுக்க ஆய்வு செய்ய வேண்டும். நேற்றிரவுதான் புகார் செய்யப்பட்டது என்பதால் (யோங்கை இன்று நீதிமன்றத்தில் நிறுத்துமுன்னர்) ஏஜி அதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அலசி ஆராய்வது சாத்தியமில்லை.
“அதனால்தான் இன்று நீதிமன்றத்தில் நிறுத்திக் குற்றஞ்சாட்ட வேண்டாம் என்று தொடக்கத்திலேயே டிபிபி-யைக் கேட்டுக்கொண்டோம்”, என்றாரவர்.
நேற்றிரவு, ங்கே போலீசில் செய்திருந்த புகாரில், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானதாகக் கூறிக்கொள்ளும் பெண்ணுடன் போலீஸ் நிலையம் சென்ற ஒரு ஆடவர் ரிம100,000வரை ரொக்கமாக பெற்றுக்கொண்டிருக்கிறார் என்றும் அதனால் அவர் குற்றம்சாட்டுபவருக்கு உதவும் கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளார் என்றும் கூறி இருந்தார்.
“அப்புகாரில் ரிம100,000 கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு இன்னும் விசாரிக்கப்பட்டிருக்காது என்பது தெளிவு”, என்று ராம்கர்ப்பால் கூறினார்.
அதைத் தீர விசாரிக்க வேண்டும். அதில் உண்மை இருக்குமாயின் யோங்குக்கு எதிரான வழக்கு கைவிடப்பட வேண்டும் என்றவர் வலியுறுத்தினார்.