கடந்த பிப்ரவரி மாதம் தமிழ் நேசன் பத்திரிக்கை நிறுவனம் மூடப்பட்டதைத் தொடர்ந்து, தங்களுக்கு இழப்பீடு எதுவும் வழங்கப்படவில்லை, அதனை மனிதவள அமைச்சர் எம் குலசேகரன் கண்டுக்கொள்ளவில்லை எனக் குற்றஞ்சாட்டி, தமிழ் நேசன் பத்திரிக்கையின் முன்னாள் தொழிலாளர்கள் சுமார் 30 பேர், தங்கள் ஏமாற்றத்தைத் தெரிவிக்க, விஸ்மா இ & சி, டாமான்சாராவில், இன்று காலை ஒன்றுகூடினர்.
உத்துசான் மலேசியா பத்திரிக்கையின் தொழிலாளர்கள் எதிர்நோக்கியப் பிரச்சனையை மேற்கோள்காட்டி, கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் பழமையான அத்தமிழ் தினசரி மூடப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் நிதி சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக அதன் முன்னாள் தலைமை ஆசிரியர் பி பத்மநாபன் தெரிவித்தார்.
“நாங்கள் அனுதாபம் தேட விரும்பவில்லை.
“உத்துசான் மலேசியா தொழிலாளர்கள் எதிர்நோக்கிய அதேப் பிரச்சனையைதான் நாங்களும் எதிர்நோக்கினோம். எங்களுக்கும் சம்பளமும் இழப்பீடும் கிடைக்கவில்லை, எங்களுக்கும் குடும்பம் உள்ளது. ஆனால், இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால், அவர்கள் மீது அதிக அக்கறை காட்டிய அமைச்சர் (குலசேகரன்), எங்களைக் கண்டுகொள்ளவே இல்லை,” என்றார்.
இதற்கு முன்னர், முதலாளி நிலுவையில் இருக்கும் சம்பளத் தொகை மற்றும் RM1.36 மில்லியன் இழப்பீடு வழங்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்து, மனித வள அமைச்சில் மகஜர் ஒன்றைச் சமர்ப்பித்தோம், ஆனால், அமைச்சர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பத்மநாபன் கூறினார்.
“எங்களைச் சந்திப்பதில் என்ன தவறு இருக்கிறது? அரசியல் இலாபம் தரும், விஷயங்களில் மட்டும் அவர் கவனம் செலுத்துவது சரியல்ல,” என்றும் அவர் சொன்னார்.
கடந்த ஜூலை 17-ம் தேதி, டத்தோ ஶ்ரீ சா வேல்பாரிக்குச் சொந்தமான தமிழ் நேசன் நாளிதழுக்கு எதிராக, அதன் 40 ஊழியர்கள் கோம்பாக் வட்டாரத் தலைமை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
முன்னதாக, முன்னாள் தமிழ் நேசன் ஊழியர்களின் பிரதிநிதி எஸ்.எம்.சுந்தர், தொழிலாளர்களைச் சந்திக்க, முதலாளிக்கு ஒரு வாரம் அவகாசம் அளிப்பதாக தெரிவித்தார்.
“எட்டு மாதங்கள் ஓடிவிட்டன. முதலாளி இன்னும் எங்களைப் பார்க்க விரும்பவில்லை. எங்களைப் பார்க்க அவர்களுக்கு ஒரு வாரம் அவகாசம் தருகிறோம். இல்லையெனில் நாங்கள் மீண்டும் இங்கு வருவோம்,” என்றார்.
பி.எஸ்.எம். துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன், இன்று நடைபெற்ற போராட்டத்தில் ஊழியர்களுக்கு ஆதரவாக கலந்துகொண்டார். அவர்களின் மகஜர் முதலாளியின் பிரதிநிதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இது தொடர்பாக விளக்கம் பெற, மலேசியாகினி குலசேகரனைத் தொடர்பு கொண்டது.