சர்ச்சைக்குரிய பேச்சாளர் டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக, இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாட்டாளர்கள் இரத்து செய்துள்ளனர்.
நேற்றிரவு, பிரிக்ஃபீல்ட்ஸ், லிட்டல் இந்தியாவில், தமிழ்ப்பள்ளிகளில் ஜாவி எழுத்து அறிமுகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தப் போராட்டம் எந்தவொரு அசம்பாவிதமும் இல்லாமல் நடந்தேறியது.
பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் தொலைபேசியில் அழைத்துப் பேசியதால், இன்று நடக்கவிருந்த போராட்டம் இரத்து செய்யப்படுவதாக அதன் ஏற்பாட்டாளர் சங்கர் கணேஷ் தெரிவித்தார்.
“அன்வார் என்னை அழைத்து, பேரணியை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
“இந்தியச் சமூகத்திற்கு உதவுவதாக அவர் உறுதியளித்துள்ளார். இப்பிரச்சனைகள் குறித்து கலந்துபேச, அடுத்த வாரம் எங்களைச் சந்திப்பதாகக் கூறியுள்ளார்.
“அவருடைய வேண்டுகோளுக்கு இணங்க, நாங்கள் இந்தப் போராட்டத்தைக் கைவிடுகிறோம். அன்வாரின் வாக்குறுதியை நான் நம்புகிறேன்,” என நேற்றிரவு, மலேசியாகினிக்கு அனுப்பிய ஓர் அறிக்கையில் சங்கர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, போலிசாரிடம் இருந்து ஏற்பாட்டாளர்களுக்குப் ‘பெர்மிட்’ கிடைக்காததும், இன்றையப் போராட்டம் இரத்து செய்யப்படுவதற்குக் காரணம் என அவர் சொன்னார்.
“சட்ட ஒழுங்குக்கு எதிராக நடக்க நான் விரும்பவில்லை. பெர்மிட் இல்லாத காரனத்தால், பொது மக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது. நான் முறையாக அனுமதி பெற்று, இப்போராட்டத்தை நடத்த விரும்பினேன்,” என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இன்று நடைபெறவிருந்த, “ஜாகிர் நாயக்கிற்கு வேண்டாம் சொல்லுங்கள், இந்தியர்களுக்கும் மற்ற இனத்தவருக்கும் சம உரிமை” எனும் போராட்டத்தை நிறுத்தச் சொல்லி பல தரப்பினர் கேட்டுக்கொண்டனர்.
நேற்றிரவு நடந்த போராட்டத்தில், ஏற்பாட்டாளர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலிசார் தெரிவித்தனர்.