பி.எஸ்.எம். : வறுமையை நாம் இன்னும் ஒழிக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள பி.எச். தயாரா?

ஐ.நா. வறுமை ஆய்வு சிறப்பு அறிக்கையாளர், மலேசியாவின் அதிகாரப்பூர்வ வறுமை கோட்டு அளவு 0.4 விழுக்காடு அல்ல, அது 15 விழுக்காட்டை நெருங்கி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுவரை, வறுமையில் வாடும் மில்லியன் கணக்கானவர்களை அப்பட்டியலில் இருந்து விலக்கமுடியாத நிலையில், பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) அரசாங்கம் இந்த அதிகாரப்பூர்வப் புள்ளி விவரங்களை ஏற்றுக்கொள்ள தயாரா என பி.எஸ்.எம் தலைமைச் செயலாளர் சிவராஜன் ஆறுமுகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

“வறுமையை ஒழித்துவிட்டதாக அல்லது குறைத்து விட்டதாகக் கூறுவது ஒரு கேலிக்கூத்து. பொய்யான இந்தத் தகவலால், நாட்டில் வறுமைக் குறைப்புத் திட்டங்களுக்காக குறைந்த அளவிலேயே முதலீடுகள் செய்யப்படுகின்றன.

“நம் மக்களில் பெரும்பான்மையினர், போதுமான வாழ்வாதாரப் பாதுகாப்பு இல்லாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்பதனையே இது நிரூபிக்கிறது. அதே நேரத்தில், நம் நாடு நடுத்தர வருமானம் பெறும் நாடு, அது உயர் வருமானம் பெறும் அந்தஸ்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது என நாம் பெருமைபட்டுக்கொள்கிறோம்,” என சிவராஜன் நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

நேற்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், 1970-களில் இருந்து, வாழ்க்கைச் செலவினம் குறைந்தது ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. அதனால், சராசரி குடும்ப வருமானம் RM980 என்ற காலாவதியான எண்ணிக்கையை, வறுமை கோட்டு வருமானமாக அரசாங்கம் வைத்திருப்பது நியாயமற்றது எனத் தீவிர வறுமை மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர், பேராசிரியர் பிலிப் ஆல்ஸ்டன் பி.எச். அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்.

அரசாங்க நிறுவனங்களும் ஆராய்ச்சி மையங்களும் இந்த விஷயத்தை முன்னரே முன்னிலை படுத்தியிருந்தாலும், பி.எச். அந்த உண்மையைத் தைரியமாக ஏற்கத் தவறிவிட்டது என்றார் சிவராஜன்.

அண்மையில், பி.எஸ்.எம். தேசியத் தலைவர் டாக்டர் ஜெயக்குமார் கூறியதுபோல, பிஎன் ஆட்சியின் போது ‘1மலேசியா மக்கள் உதவிநிதி’யைப் பெற்றுவந்த பெரும்பாலான தனிநபர்கள், பி.எச். அரசாங்கத்தின் புதிய வாழ்வாதார உதவித் தொகை (பி.எஸ்.எச்.) திட்டத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளதை மேற்கோள்காட்டிய சிவராஜன், இதுபோன்ற புறக்கணிப்புகளை பி.எஸ்.எம். மிகத் தீவிரமாகக் கருதுகிறது என்றார்.

“60 வயதுக்குக் குறைவான மற்றும் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளைப் பெற்றிறாத தனித்து வாழும் பெற்றோர், இனி உதவித்தொகை பெறத் தகுதியற்றவர்கள் என்று லிம் குவான் எங் தலைமையில் செயல்படும் நிதியமைச்சு, பணப் பரிமாற்றங்களுக்கான விதிமுறைகளை இறுக்கமாக்கியுள்ளது.

“அதுமட்டுமின்றி, மலேசியத் தொழில்நிறுவன ஆணையத்தின் (எஸ்எஸ்எம்) கீழ் பதிவு செய்துள்ள பி40 குழுவினரும், பிஎஸ்எச் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

“இது முட்டாள்தனமானது. சாலையோரங்களில் உணவு, காய்கறிகள் விற்கும் அவர்களால், மாதந்தோறும் RM1,500 சம்பாதிக்க முடியும் என்பது உறுதியல்ல,” என அவர் மேலும் சொன்னார்.

 

வறுமைக் கோட்டு வருமானம் RM980 எனும் நம்பத்தகாத அளவீடு, மலேசியத் தொழிலாளர்களின் ஊதியத்தை நேரடியாகப் பாதிக்கிறது என்றார் அவர்.

“வறுமைக் கோட்டு வருமானம் RM980 எனும் அளவீடு, குறைந்தபட்ச ஊதியக் கணக்கீட்டு முறையில் ஒரு முக்கிய அங்கமாகும். உண்மையான அல்லது யதார்த்தமான வறுமைக் கோட்டு வருமானம் பயன்படுத்தப்பட்டால், சராசரி குறைந்தபட்ச ஊதியம் பி.எஸ்.எம். மற்றும் எம்.டி.யூ.சி. கோரியபடி, RM1,800-க்கு அருகில் இருக்கும், RM1,100 என்ற மிகச்சிறிய எண்ணிக்கையில் அது இருக்காது,” என்றும் கூறியுள்ளார்.

ஐ.நா. அறிக்கையாளரின் தகவல்கள், சிவில் சமூகத்தின் கோரிக்கைகளுடன் ஒத்துப்போவதால், வறுமைக் கோட்டு வருமானத்தை மறுபரிசீலனைச் செய்ய வேண்டும் என சிவராஜன் கேட்டுக்கொண்டார்.

“வறுமைக் கோட்டு வருமானம் எவ்வளவு என்பதை அரசாங்கம் மறுபரிசீலனை செய்வதோடு, ஏழைகளுக்கு உதவும் வகையில் சமூகப் பாதுகாப்பு திட்டங்களைத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும்.

“ஏழைகளைத் துல்லியமாக அடையாளம் காண மறுக்கும் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், வறுமையை எவ்வாறு நிவர்த்தி செய்யப்போகிறது,” என்ற கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார்.