தமிழ்ப்பள்ளி பாடத்திட்டக் குழுவை, கே.பி.எம். மறுசீரமைக்க வேண்டும்

எதிர்காலத்தில், ஜாவி எழுத்து அறிமுகம் போன்ற சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக, தமிழ்ப்பள்ளி பாடத்திட்டக் குழுவை மறுசீரமைக்க வேண்டும் என்று பிரிக்ஃபீல்ட்ஸ், லிட்டில் இந்தியாவில், நேற்று நடைபெற்ற தமிழ்ப்பள்ளிகளில் ஜாவி எழுத்து எதிர்ப்பு பேரணி ஏற்பாட்டாளர்கள் (புரட்சி) மலேசியக் கல்வி அமைச்சுக்கு (கே.பி.எம்) கோரிக்கை வைத்தனர்.

புரட்சி இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர், கே உமாகாந்தன், பெரும்பாலான பாடத்திட்டக் குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் அடிமட்ட உணர்வுகளை அமைச்சிடம் தெரிவிக்கத் துணிய மாட்டார்கள் என்றார்.

“கே.பி.எம்.-இல் உள்ள திட்டக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலோர் உயர்க்கல்வி கூடங்களில் பேராசிரியர்களாகவோ அல்லது விரிவுரையாளர்களாகவோ இருப்பர். அரசு ஊழியர்களான இவர்கள் முதலாளிக்கு (அரசாங்க முடிவு) எதிராகச் செல்லத் துணியமாட்டார்கள் என்பதை நாங்கள் அறிவோம்.

“இதனைத்தான் நாங்கள் ஜாவி எழுத்துப் பிரச்சனையில் கண்டோம். கேபிஎம், அடிமட்ட உணர்வைக் கொண்டுவரத் துணியாத சில தனிநபர்களின் கருத்துக்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டது,” என்று கோலாலம்பூரில் இன்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

அரசாங்கம் மற்றும் எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராத கல்வியாளர்களைப் பாடத்திட்டத்தில் கருத்துக்களை வழங்க நியமிக்க வேண்டுமென உமாகாந்தன் கல்வியமைச்சை வலியுறுத்தினார்.

“இந்திய சமூகம், சுயாதீன கல்வியாளர்கள் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என விரும்புகிறது. அரசாங்கத்திற்கு ‘ஆமாம் சாமி’ போடும் நபர்கள் எங்களுக்கு வேண்டாம்,” என்றார் அவர்.

இதற்கிடையில், அவரது வழக்கறிஞர் தினேஷ் முத்தால், ‘புரட்சி’ இயக்கம் நேற்றையப் பேரணிக்காக மட்டும் உருவாக்கப்படவில்லை என்று விளக்கினார்.

“இது ஓர் இயக்கம். இந்த இயக்கம் தொடர்ந்து செயல்படும். இந்தப் போராட்டத்தில்கூட, எங்களுடன் 33 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்கள் – சீன சமூகத்தின் பிரதிநிதிகள் உட்பட – கலந்துகொண்டனர்.

“தேசிய வகைப் பள்ளிகளின் அடிப்படை உரிமைகள் தொடர்பில், அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து கண்கானிப்போம். எங்களுக்கு அதிருப்தி ஏற்பட்டால், குரல் கொடுப்போம்,” என்று அவர் மேலும் கூறினார்.