ஐநா வறுமை விகித ஆராய்ச்சி நிபுணர், ஆய்ந்து கூறியுள்ள நாட்டின் வறுமை விகித புள்ளிவிவரத்தை, அது தன்னுடைய அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரத்தைக் காட்டிலும் உயர்வாக இருப்பதால் உதாசீனப்படுத்தி விட வேண்டாம் என மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ்(எம்டியுசி) அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டின் உண்மையான வறுமை விகிதத்தை அரசாங்கம் குறைத்தே காண்பித்து வந்துள்ளதாகக் கூறிய எம்டியுசி தலைமைச் செயலாளர் ஜே.சாலமன், இப்போது ஐநாவின் வறுமை நிலை ஆய்வாளரும் மனித உரிமை அதிகாரியுமான பிலிப் அல்ஸ்டன் கண்டுபிடித்துக் கூறியிருக்கும் முடிவுகளைப் புறந்தள்ளிவிட வேண்டாம் என்று வலியுறுத்தினார்.
ஐநா அதிகாரி ஆய்ந்து கூறிய முடிவு எம்டியுசி-இன் நிலைப்பாட்டுடன் ஒத்துப் போவதாகக் கூறிய சாலமன், அரசாங்கம் உண்மை நிலவரங்களைக் கொண்டு வறுமை நிலையை ஆராயவில்லை என்று கூறியது.
அரசாங்க புள்ளிவிவரங்கள் 1970-இல் 49 விழுக்காட்டாக இருந்த வறுமை விகிதம் 2016-இல் 0.4க்குக் குறைந்து விட்டதாக தெரிவிக்கின்றன.
ஆனால்,11-நாள் மலேசியாவுக்கு அலுவல் பயணம் மேற்கொண்டிருந்த அல்ஸ்டன், நாட்டின் வறுமை விகிதம் சுமார் 15 விழுக்காடு என்கிறார். அதாவது 937,500 வீடுகள் இன்னுமும் வறுமைநிலையில் உள்ளன என சாலமன் கூறினார்.
இந்நிலையில், பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் நாட்டின் வறுமை நிலை மீண்டும் ஆராயப்படும் என்று கூறியிருப்பதை அவர் வரவேற்றார்.
வறுமை நிலைக்கும் குறைந்தபட்ச சம்பளத்துக்கும் தொடர்பு இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இப்போதைய குறைந்தபட்ச சம்பளமான ரிம1,100 நடப்பு வாழ்க்கைச் செலவினத்துக்குப் போதுமானதல்ல என்றார்.
“அதற்குக் குறைந்தபட்ச சம்பளம் கணிசமாக உயர்த்தப்பட வேண்டும்.
“அது பணவீக்கத்தை உண்டுபண்ணும் என்று காரணம் சொல்வதை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும்”, என்றாரவர்.