மலேசியாவில் இனங்களுக்கிடையில் சர்ச்சையை உண்டு பண்ணுகிறார் என்பதால் சமயப் போதகர் டாக்டர் ஜாகிர் நாய்க்கை நாடு கடத்த வேண்டும் என்று கூறிய இளைஞர், விளையாட்டு அமைச்சர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் இப்போது தன் கருத்தை மாற்றிக் கொண்டிருப்பதற்காக பல தரப்புகளும் அவரைக் கண்டித்துள்ளன.
சாடிக் நேற்று, ஜாகிரின் மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாகவும் அதனால் அவர் ஏற்படுத்திய சர்ச்சையை மறந்து மலேசியர்கள் மற்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
அதற்காக அவரைக் கடிந்துகொண்ட பினாங்கு முதலமைச்சர் II பி.இராமசாமி, பக்கத்தான் ஹரப்பான் அமைச்சர்கள் “பல்டி அடிப்பதில் கெட்டிக்காரர்கள் என்று கூறப்படுவதை” உண்மைதான் நிரூபிப்பதுபோல் உள்ளது சைட் சாடிக்கின் செயல் என்றார்.
ஒரு நேரத்தில் சைட் சாடிக்கால் ஜாகிர் (மலேசிய) இந்துக்கள் மற்றும் சீனர்களின் விசுவாசம் குறித்துக் கேள்வி எழுப்பியதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவரைக் கண்டித்தார். நாட்டைவிட்டு வெளியேற்றப்பட வேண்டாம் என்றார்.
“ஆனால், சில நாள்களுக்குப் பிறகு, ஜாகிருடன் ஒன்றாக இரவு உணவு உண்ட பின்னர் அமைச்சரவையின் ஆக இளைய அமைச்சரின் நிலைப்பாடு அப்படியே மாறி விட்டது”.
ஒரு பொறுப்பான அமைச்சர் இப்படியா மனம்போன போக்கில் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வது என்று இராமசாமி இடித்துரைத்தார்.
“உலகில் யார்தான் தவறு செய்யவில்லை. ஜாகிர் மன்னிப்பு கேட்டு விட்டார். இனியும் அவரை அவமதிக்க வேண்டியதில்லை, ஆத்திரப்பட வேண்டியதில்லை. அதை விடுத்து மற்றவற்றில் கவனம் செலுத்துவோம்”, என சைட் சாடிக் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
ஜாகிர் உளப்பூரவமாகத்தான் மன்னிப்பு கேட்டாரா என்று இராமசாமி வினவினார்.
“இந்துக்கள், சீனர்களின் மனம் புண்படும்படி சினமூட்டும் வகையில் பேசியதற்காக அவர் மன்னிப்பு கேட்கவில்லை, தன்னுடைய பேச்சைப் புரிந்துகொள்ளாமல் தப்பும் தவறுமாக திரித்துக் கூறி விட்டார்களாம் அதற்காகத்தான் அவர் மன்னிப்பு கேட்டார்.
“சைட் சாடிக் இப்போது சொல்லுங்கள் …..ஜாகிர் உண்மையாகத்தான் மன்னிப்பு கேட்டாரா?”, என்றாரவர்.