இந்தியாவிலிருந்து வந்திருக்கும் மதப்போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் பிரச்சினையைக் கையாள்வதில், தங்கள் புதிய நண்பர்களான பாஸ் தலைவர்கள் சிலரின் போக்கு வருத்தமளிப்பதாக மஇகா தெரிவித்துள்ளது.
மலேசியாவில் வாழும் பிற இனங்களை மதிக்க வேண்டும் என்று ஜாகிருக்கு பாஸ் அறிவுரை கூறியிருக்க வேண்டுமென, மஇகா தேசியத் தலைவர் எஸ் ஏ விக்னேஸ்வரன் கூறினார்.
“அதைவிடுத்து, நிலைமையை மேலும் மோசமாக்க அவரை ஊக்குவிக்கக் கூடாது,” என்றார் அவர்.
நேற்றிரவு, கோலால்ம்பூர், புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெற்ற, மஇகாவின் 73-வது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில், தொடக்க உரையாற்றிய அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர், அரசியல் எதிரிகளாக இருந்த மஇகாவும் பாஸ்சும், கடந்தாண்டு மே மாதம், பக்காத்தான் ஹராப்பான் புத்ராஜெயாவைக் கைப்பற்றிய பிறகு, நண்பர்களாயினர்.
ஜாகிர் பற்றிய கவலை இல்லை
அப்துல் ஹாடியின் கூற்றுப்படி, பாஸ், மஇகா, அம்னோவின் ஒற்றுமை ஒன்றும் புதியதல்ல, காலனித்துவக் காலத்திலிருந்தே அம்மூன்று கட்சிகளும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக ஒன்றுபட்டுள்ளன.
சீனர்கள் மற்றும் இந்தியர்கள் தொடர்பாக, கோத்தாபாருவில் ஜாகிர் ஆற்றிய உரையே நாட்டு மக்களிடையே பிரச்சனையே தீவிரமாக்கியது.
தான் பேசியதை ஊடகங்கள் திரித்து எழுதிவிட்டன என ஜாகிர் சொன்னார். பாஸ் தலைவர்களும் அதனை ஆமோதித்து, ஊடகங்களைக் குற்றம் சாட்டினர்.
குற்றச்சாட்டு இருந்தபோதிலும், ஜாகிர் பின்னர் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டார். கிளந்தான் அரசாங்கமான பாஸ் கட்சியின் அழைப்பை ஏற்றே, ஜாகிர் கோத்தா பாரு சென்றார்.
இதற்கிடையே, மக்களிடையே இனவாதத்தை எழுப்பாதவரையில், ஜாகிர் இங்கு தங்கி இருப்பது பற்றி கவலைப்படவில்லை என்ற விக்னேஸ்வரன், பாஸ் மற்றும் அம்னோவுடன் உறவு வைத்துக்கொண்டாலும், மஇகா தனது நிலைப்பாட்டில் உறுதியாகவே உள்ளது, அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.
எதிர்க்கட்சியாக இருக்கும் மஇகா, புத்ராஜெயா ஜாகீரை நாட்டில் – நிரந்தர குடியிருப்பாளராக – தங்க வைத்துக் கொள்ளுமா அல்லது அவரை மீண்டும் இந்தியாவுக்கே அனுப்பிவிடுமா என்பதை அறிந்துகொள்ள மஇகா ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்றார் விக்னேஸ்வரன்.
அதே நேரத்தில், மஇகா அனைத்து போதகர்களையும் இஸ்லாத்தையும் மதிக்கிறது என்ற விக்னேஸ்வரன், “ஆனால், ஜாகிர் இனங்களுக்கிடையில் பதட்ட நிலையை உருவாக்கக் கூடாது,” என்றார்.
மக்கள் விரும்பவில்லை என்றால் ஜாவியை இரத்து செய்யுங்கள்
இதற்கிடையில், ஜாவி எழுத்து கற்றல் பிஎன் அறிமுகப்படுத்தியது எனக் கூறும் பிஎச் தலைவர்களின் நடவடிக்கை குறித்தும் விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பினார்.
“ஜாவி பிரச்சினையில் பிஎன்-ஐ குற்றம் சொல்லாதீர்கள். ஜாவியை அறிமுகப்படுத்த பிஎன் கொள்கை அளவிலேயே முடிவு செய்தது.
“மக்கள் அதனை ஏற்காவிட்டால், கொள்கையை இரத்து செய்யுங்கள். அரசாங்கத் திட்டத்தை மீட்டுக்கொள்வது கடினம் அல்ல. அது சட்டமல்ல, நாடாளுமன்றத்திற்கு கொண்டுசெல்ல, அமைச்சரவையிலேயே முடிவெடுக்க முடியும்,” என அவர் மேலும் கூறினார்.
விக்னேஸ்வரனின் கூற்றுப்படி, மஇகா, ஜாவி எழுத்து படிப்பதை எதிர்க்கவில்லை. ஆனால், அது அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர், மக்களுக்குச் சரியான புரிதல் கொடுக்கப்பட வேண்டும் என்றார்.
“இது (இப்போது) சரியான நேரம் அல்ல,” என்று அவர் கூறினார்.