ஒரு முன்னாள் சிறைக்கைதி தாப்பா சிறையிலிருந்து விடுதலை ஆன இரண்டாவது நாள் ஜாலான் ஹோர்லியில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு மறுபடியும் கைதானான்.
போதைப் பொருள் குற்றத்துக்காக எட்டு மாதங்கள் உள்ளே இருந்த அந்த 31-வயது ஆடவன் நேற்றிரவு ஜெலேபாங்கில் கைது செய்யப்பட்டதாக ஈப்போ இடைக்கால போலீஸ் தலைவர் முகம்மட் நோர்டின் அப்துல்லா தெரிவித்தார்.
“நேற்றுப் பிற்பகல் 12.53க்கு நிகழ்ந்த சம்பவத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் பின்னே அமர்ந்து சென்ற அந்தச் சந்தேகப் பேர்வழி ஒரு பெண்ணின் கைப்பையைப் பறித்துச் சென்றான். கைப்பை பறிக்கப்பட்ட வேகத்தில் அப்பெண் கீழே விழுந்து கை முட்டியில் அடிபட்டது”, என்றவர் பெர்னாமாவிடம் கூறினார்.
பொதுமக்கள் ஒத்துழைப்பாலும் போலீஸ் திறமையாக செயல்பட்டதாலும் எட்டு மணி நேரத்துக்குள் குற்றம் செய்தவனைப் பிடிக்க முடிந்தது என்றார்.
இப்போது மற்றொருவனையும் போலீசார் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
வழிப்பறி நடந்ததை அப்போது அந்தப் பக்கமாகச் சென்று கொண்டிருந்த பெர்னாமா செய்தியாளர்கள் இருவர் பார்த்தனர். பார்த்தைப் படம் பிடித்தனர். அப்படங்களின் உதவியால் மோட்டார் சைக்கிளின் மாதிரி அதன் பதிவு எண் முதலியவற்றை அறிந்து குற்றம் புரிந்ததாக நம்பப்படுபவனையும் பிடிக்க முடிந்தது.
அதற்காக செய்தியாளர்களுக்கு நோர்டின் நன்றி தெரிவித்தார்.