ஜாகிர் : தன்னைப் பிரபலமாக்க இராமசாமி என் பெயரைப் பயன்படுத்துகிறார்

பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பி இராமசாமி, டிஏபி-யில் தன்னைப் பிரபலப்படுத்திக்கொள்ள, தன் பெயரைப் பயன்படுத்துகிறார் என்று டாக்டர் ஜாகிர் நாயக் கூறியுள்ளார்.

ஓர் இந்தியச் செய்தி நிறுவனத்திற்கு இராமசாமி அளித்த பேட்டி தொடர்பாக, ஆகஸ்ட் 23-ம் தேதி பதிவுசெய்த இரண்டாவது வழக்கறிக்கையில் ஜாகிர் இந்த விஷயத்தை தெரிவித்துள்ளார்.

கட்சித் தேர்தலில் ஒதுக்கப்பட்ட பின்னர், அவரை மீண்டும் கட்சியில் பிரபலப்படுத்திகொள்ள, தீமை, வெறுப்பு, பொறாமை ஆகியவற்றால் அவதூறு அறிக்கைகளை இராமசாமி வெளியிடுவதாக ஜாகிரின் வழக்கறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பினாங்கு துணை முதலமைச்சர் என்ற பதவியை அவர் வேண்டுமென்றே துஷ்பிரயோகம் செய்துள்ளது வெளிப்படையாக தெரிவதாகவும் ஜாகிர் சார்பில் வழக்கு பதிவு செய்துள்ள அக்பெர்டின் & கோ சட்ட நிறுவனம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஜாகிர் நாயக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக தனது நிலைப்பாட்டை ராமசாமி மீண்டும் வலியுறுத்தினார்.

“எனது நிலைப்பாடு தெளிவாக உள்ளது. நான் மற்றவர்களைப் போல யு-டெண்ட் அடிக்க விரும்பவில்லை. ஜாகீரை மீண்டும் இந்தியாவுக்கே அனுப்ப வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அவரை நீதிமன்றத்தில் சந்திக்க நான் தயார். நான் எங்கும் ஓடி ஒளிய மாட்டேன்,” என்று இன்று பிற்பகல், மலேசியாகினியிடம் அவர் கூறினார்.

அந்த யு-டெண்ட் செய்தவர் யார் என்று இராமசாமி குறிப்பிடவில்லை என்றாலும், அது இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் சைட் சிட்டிக் ஆக இருக்கும் என நம்பப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் 20-ல், ‘இந்தியா டுடே’ செய்தி நிறுவனத்திற்கு இராமசாமி அளித்த பேட்டியில் ஜாகிர் பற்றி குறிப்பிட்டுள்ளதை மேற்கோள் காட்டி, ஜாகிரின் 2-வது சட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.