‘க்ஹாட்’ ஜாவி எழுத்து கற்பித்தலை எதிர்க்கும் குழுவுடன், தனிப்பட்ட முறையில் உடன்படவில்லை என்றாலும், இளைஞர் மற்றும் விளையாட்டு துறையமைச்சர் சைட் சதிக் சைட் அப்துல் ரஹ்மான், அவர்களைத் தொட்டு வெளியிட்ட அறிக்கை கண்ணியமாக இருந்திருக்க வேண்டும் என்று மஇகா மத்தியச் செயற்குழு உறுப்பினர் எம்.வீரன் தெரிவித்தார்.
ஜாவி எழுத்து பயிற்றுவித்தல் தொடர்ந்தால், தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று மிரட்டிய ஒரு குழுவை, ‘திமிர்பிடித்த முட்டாள்’ என்று விமர்சித்த சைட் சதிக்கின் அறிக்கையை வீரன் குறிப்பிட்டார்.
“அவர்களின் முடிவில் அமைச்சர் அதிருப்தி கொண்டிருந்தால், தன் கருத்தைப் பணிவுடன் தெரிவித்திருக்க வேண்டும், அதற்குப் பதிலாக ‘திமிர்பிடித்த முட்டாள்’ என்று விமர்சிக்கக் கூடாது.
“டாக்டர் ஜாகிர் நாயக் பிரச்சினையில், தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருக்கும் அவரை (சைட் சாதிக்), யாராவது ‘பைத்தியம்’ என்று குற்றம் சாட்டினால் என்ன ஆகும்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
நேற்று, ‘செகாட்’ என்று அழைகக்ப்படும் ‘க்ஹாட்’ கலையெழுத்து நடவடிக்கைக் குழு, தேசிய வகைப் பள்ளிகளில் ஜாவி எழுத்து அறிமுகம் தொடர்பில் தங்களுடன் கலந்துபேச வேண்டுமென அரசாங்கத்திற்குக் கோரிக்கை வைத்தது.
மேலும், அப்படி செய்யவில்லையானால், எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாமென பெற்றோர்களைக் கேட்டுக்கொள்வோம் என்றும் அக்குழு கூறியது.
இதனைத் தொடர்ந்து, சைட் சதிக் அக்குழுவினரைத் ‘திமிர்பிடித்த முட்டாள்கள்’ என விமர்சித்தார்.
“மூன்றே பக்கங்கள் கொண்ட, பரீட்சைக்கு வராத, தேர்வுப்பாடமாக வழங்கப்பட்ட ஒன்றிற்காக, தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனக் கூறுவது திமிர்கொண்ட முட்டாள் தனம்,” என்று தனது டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளார்.
‘செக்காட்’ இந்தப் பிரச்சனையில் மாணவர்களை இணைத்திருக்கக் கூடாது, அதேசமயம், சைட் சைதிக்கும் அப்படி சொல்லி இருக்கக் கூடாது என வீரன் தெரிவித்தார்.