சிலாங்கூர் பிகேஆர் தலைமைத்துவ மன்ற உறுப்பினர் ரோட்ஸியா இஸ்மாயில், பிகேஆர் தலைவர்கள் கட்சிக் கூட்டங்களில் கலந்துகொள்ளாதது ஏன் என்பதைக் கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“கட்டொழுங்குக் குழு இதை விசாரிக்க வேண்டும்”, என்றவர் கூறியதாக சினார் ஹரியான் அறிவித்துள்ளது.
தொடர்ந்து கட்சிக் கூட்டங்களில் கலந்துகொள்ளாதிருக்கும் தலைவர்களைக் கட்டொழுங்குக் குழுவின் கவனத்துக்குக் கொண்டு செல்லலாமா என்று வினவியதற்கு ரோட்ஸியா அவ்வாறு கூறினார்.
பிகேஆர் தலைவர்கள் பலர், குறிப்பாக துணைத் தலைவர் அஸ்மின் அலி, பிகேஆர் உதவித் தலைவர் சுரைடா கமருடின், சிலாங்கூர் பிகேஆர் தலைவர் அமிருடின் ஷாரி முதலானோர் ஆகஸ்ட் 25 பிகேஆர் மத்திய தலைமைத்துவ மன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
எல்லாத் தலைவர்களும் கண்டிப்பாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் நினவுபடுத்தி இருந்தும்கூட அவர்கள் கலந்துகொள்ளவில்லை.
அரசாங்கத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்தாலும்கூட பிகேஆர் தலைவர்கள் கட்சிக் கூட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என ரோட்ஸியா கேட்டுக்கொண்டார். மற்ற விவகாரங்களைவிட கட்சிக் கூட்டங்கள் முக்கியமானவை என்றாரவர்.