இவ்வாண்டின் ஐந்து மாதங்களில், ஜொகூரில் நிகழ்ந்த இயற்கைப் பேரிடர்களை மாநில அரசும் மத்திய அரசும் தீவிரமாகக் கண்கானிக்க வேண்டும் என இஸ்கண்டார் புத்ரி எம்.பி. லிம் கிட் சியாங் தெரிவித்தார்.
இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு அனைவரும் முன்னுரிமை அளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று லிம் கூறினார்.
அதற்காக, ஜொகூரில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த மாநாட்டை ஏற்பாடு செய்ய, ஜொகூர் உள்ளாட்சி, நகர்ப்புற மற்றும் சுற்றுச்சூழல் நல்வாழ்வு ஆட்சிக்குழு உறுப்பினர் தான் சென் சூன்’னிடம் பரிந்துரைத்ததாக லிம் கூறினார்.
மத்திய அரசுடன் இணைந்து, இந்த மாநாட்டை ஏற்பாடு செய்யலாம் என்றார் அவர்.
“ஜொகூரில் சுற்றுச்சூழலுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. எனவே, ஜொகூரில் உள்ள சுற்றுச்சூழல் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தவும், சுற்றுச்சூழல் தர திட்டங்களை உருவாக்க வழி வகுக்கவும் சுற்றுச்சூழல் மாநாட்டை ஏற்பாடு செய்யுமாறு நான் தான்’னிடம் கூறியுள்ளேன்,” என்றார் அவர்.
இஸ்கண்டார் புத்ரியில் காடு தீப்பற்றி எரிகிறது
இதற்கிடையே கடந்த 3 நாட்களாக இஸ்கண்டார் புத்ரியில், சுமார் 40 ஹெக்டர் காடு தீப்பற்றி எரிகிறது.
அக்காட்டிற்கு அருகில் (சுமார் 50 மீட்டர்) அமைந்திருக்கும் தஞ்சோங் அண்டாங் இடைநிலைப் பள்ளி மற்றும் தஞ்சோங் அண்டாங் தேசியப் பள்ளி இரண்டையும் மூடச்சொல்லி சுற்றுச் சூழல் இலாகா ஆலோசனைக் கூறியுள்ளதாக தான் தெரிவித்தார்.
ஜாலான் குப்பாங்கில் அமைந்துள்ள அவ்விரு பள்ளிகளும் காட்டுத் தீயினால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
நேற்று, ஜொகூர் மாநிலத் துணைக் கல்வி இயக்குநர், சலினா ஹுஸ்சைன் இதுவரை மாநிலச் சுற்று சூழல் இலாகாவில் இருந்து, தங்களுக்கு எந்தவொரு அறிவிப்பும் வரவில்லை எனக் கூறியுள்ளார்.
மார்ச் மாதத்தில், கிம் நதியில் நச்சு மாசுபாடு தொடங்கி, பாசீர் கூடாங்கில் (ஜூன்) காற்று மாசுபாடு மற்றும் இஸ்கண்டார் புத்ரியில் 40 ஹெக்டர் நிலத்தை அழித்த காட்டுத் தீ போன்றவற்றால், கடந்த சில மாதங்களாக ஜொகூர் அதிகமானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த மூன்று பேரழிவுகளும், பள்ளி குழந்தைகள் உட்பட பலரின் வாழ்க்கையைப் பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.