1எம்டிபி ஊழல் விவகாரம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்ததும் நஜிப் அப்துல் ரசாக்கும் சட்டத்திலிருந்து தப்பி ஓடிக் கொண்டிருக்கும் தொழிலதிபர் லோ டேக் ஜோவும் அதை மூடி மறைக்க முயன்றார்கள். “அரபு நன்கொடையாளர்” ஒருவர் முன்னாள் பிரதமருக்கு அள்ளிக் கொடுத்தார் என்று கூறி அதற்கு ஆதாரமாக போலி ஆவணங்களையும் தயாரித்ததும் அவர்களின் மூடி-மறைக்கும் முயற்சிகளில் அடங்கும்.
இவ்வாறு கூறி அரசுத் தரப்பு வழக்குரைஞர் கோபால் ஸ்ரீராம் இன்று காலை கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் நஜிப்பின் 1எம்டிபி வழக்கைத் தொடக்கி வைத்தார்.
நஜிப் 1எம்டிபி-இலிருந்து ரிம2.28 பில்லியனைச் சுருட்டுவதற்கு அதிகார அத்துமீறல்களில் ஈடுபட்டதாகவும் பணச் சலவை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் 25 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
“1எம்டிபி நிதிக் கையாடல் பல கட்டங்களில் நடந்துள்ளது பலரும் அதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள், என்றாலும் அதில் நடுநாயகமாக விளங்குபவர் நஜிப்தான்.
“குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் சட்ட நடவடிக்கையைத் தவிர்க்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
“1எம்டிபி விசாரணைகளில் அவர் குறுக்கிட்டதும் உண்டு”, என்று தமது தொடக்கவுரையில் கூறிய கோபால் ஸ்ரீராம், அதற்கான ஆதாரங்களை அரசுத் தரப்பு காண்பிக்கும் என்றார்.
வழக்கு நீதிபதி கோலின் லாரன்ஸ் சிகுயிரா முன்னிலையில் நடைபெறுகிறது.