ஷாரிசாட் விளக்கமளிக்க வேண்டும்,பேராளர்கள் வலியுறுத்து

அம்னோ மகளிர் தலைவி ஷாரிசாட் அப்துல் ஜலில், சர்ச்சைக்குரிய நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன் விவகாரத்தில் இரண்டு நாள்களுக்குமுன் பேராளர்களின் ஆதரவைப் பெறுவதில் வெற்றி பெற்றார் என்ற போதிலும் பேராளர்கள் சிலர், அமைச்சரைத் தற்காத்துப் பேசுவது சிரமமாக உள்ளது என்றும் அவ்விவகாரம் தொடர்பில் அமைச்சரிடமிருந்து விரிவான விளக்கம் தேவை என்றும் கூறியுள்ளனர்.

இன்று அம்னோ பேரவையில் பேசிய பாகாங் பேராளர் வான் அமிசான் வான் அப்துல் ரசாக், உயர்த் தலைவர்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் பற்றி விவாதிப்பதில் அடிநிலை உறுப்பினர்கள் பிரச்னைகளை எதிர்நோக்குவதாக கட்சித் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் முறையிட்டார்.

“உயர்த் தலைவர்களே, சர்ச்சைகளை உண்டாக்காதீர். அடிநிலையில் உள்ள எங்களால் அவற்றுக்குப் பதில் சொல்லி மாளவில்லை. ஆகக் கடைசியாக வந்திருப்பது என்எப்சி”, என்று அந்த ஜெராண்டுட் பேராளர் குறிப்பிட்டார்.

மலேசியாகினி சந்தித்த பல பேராளர்கள், ஷாரிசாட் சர்ச்சை குறித்த  விளக்கக்கூட்டம் ஒன்றை நடத்தியதாக தெரிவித்தனர்.

“ஊடகங்களுக்கு விளக்கம் அளிப்பது போதாது. அவர் (மகளிர்) பிரச்சாரப் பிரிவின் வழி அடிநிலை உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்”, என்று தெலுக் இந்தான் தொகுதி பேராளர் யஹயா ஹசன் கூறினார்.

அவரது கருத்தை புத்ரி பேராளர் நூருல்ஹுடா மர்சிடியும் ஏற்றார். மாற்றரசுக் கட்சியினர் எழுப்பியுள்ள விவகாரத்துக்கு மகளிர் தலைவி முழுமையான விளக்கம் அளிக்க வேண்டும் என்றாரவர்.

மாற்றரசுக் கட்சியினர் தம்மைப் பற்றிக் கூறுவதெல்லாம் அவதூறு என்று ஷாரிசாட் சொல்வதைப் பேராளர்கள் ஒத்துக்கொண்டாலும் அடிநிலை உறுப்பினர்கள் சிலர் மாற்றரசுக் கட்சியினர் சொல்வதை நம்பிவிடலாம் என்றவர்கள் கூறினர்.

“அவ்தூறாகவே இருக்கட்டும். அதனால்கூட கட்சி பாதிப்புறலாம். அடிநிலை உறுப்பினர்கள் அவற்றை உண்மை என்று நம்பி விடலாம்”, என்று கோத்தா ராஜா தொகுதிப் பேராளர் மிஸ்னான் அஹ்மட் குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தலுக்குமுன் இவ்விவகாரம் வெளிவந்ததும் நல்லதுக்குத்தான் என்று மிஸ்னான் கருதுகிறார். இதனால் அமலாக்கப் பிரிவுகள் அதை விசாரிப்பதற்குப் போதுமான அவகாசம் கிடைத்துள்ளது என்றாரவர்.

‘தவறு செய்வோருக்குப் பாதுகாப்பு இல்லை’

“அம்னோ என்றுமே தவறு செய்தவர்களைப் பாதுகாத்தது இல்லை”, என்றாரவர். 

புதன்கிழமை, ஷாரிசாட் மகளிர் பேராளர் கூட்டத்தில் அனல்கக்கும் உரையாற்றி பேராளர்களின் ஆதரவைக் கவர்வதில் வெற்றிபெற்றார் என்றாலும் அவரின் கணவரைத் தலைவராகக் கொண்ட என்எப்சி-க்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறினாரே தவிர சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குத் தகுந்த பதில் அளித்தாரில்லை.

இப்படி சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருந்தாலும் ஷாரிசாட் அடுத்த தேர்தலில் ஒரு வெற்றிபெறக்கூடிய வேட்பாளர்தான் என்பதே நேர்காணலில் நாம் சந்தித்த பேராளர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது.

ஷாரிசாட், நேரடியாக அந்த விவகாரத்தில் சம்பந்தப்படவில்லை என்பதையும்  போலீஸ் படை துணைத்தலைவர் காலிட் அபு பக்கார், நம்பிக்கை மோசடியோ வேறு முறைகேடுகளோ பூர்வாங்க விசாரணிகளில் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறியிருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

“அதனால் அவ்விவகாரம் அவரின் வெற்றிவாய்ப்பைப் பாதிக்காது. மாற்றுக்கட்சியினர் இல்லாததையும் பொல்லாததையும்தான் சொல்வார்கள். ஒவ்வொரு விவகாரத்தையும்  எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்குத் திரித்துக் கூறுவார்கள்”, என்று யஹ்யா கூறினார்.

தாசிர் குளுகோர் பேராளர் அசிசா முகம்மட்டும் அவ்வாறு கூறினார். என்எப்சி விவகாரம் ஷாரிசாட்டின் வெற்றி வாய்ப்பைக் கெடுத்து விடாது என்றாரவர்.

ஷாரிசாட், 2008 பொதுத் தேர்தலில் லெம்பா பந்தாய் தொகுதியில் போட்டியிட்டு பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வாரிடம் தோற்றார். பின்னர் அவர் செனட்டராக நியமனம் செய்யப்பட்டு மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சரானார்.

TAGS: