ஓராங் அஸ்லி பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு ஏற்றிச் செல்லும் பேருந்து உரிமையாளர்களுக்கு ஐந்து மாதங்களாக அரசாங்கம் பணம் கொடுக்கத் தவறிவிட்டது என கேமரன் மலை எம்பி ரம்லி முகம்மட் நோர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பணம் கிடைக்காததால் பேருந்து உரிமையாளர்கள்- அவர்களில் பெரும்பாலோர் ஓராங் அஸ்லிகள்- துன்பப்படுகிறார்கள் என்றாரவர்.
ஓராங் அஸ்லி மேம்பாட்டுத் துறையும் பிரதமர் துறையும் ஓராங் அஸ்லி பிள்ளைகளைப் பள்ளிகளுக்குக் கொண்டுசெல்லும் பேருந்துகளுக்குப் பணம் கொடுக்கா விட்டால் அச்சேவை நின்று போகும். அதன் விளைவாக ஒராங் அஸ்லி பிள்ளைகளில் பலர் பள்ளிகளுக்குச் செல்ல முடியாத நிலை உருவாகும் என்று ரம்லி குறிப்பிட்டார்.
“ஒவ்வோராண்டும் ஓராங் அஸ்லி பிள்ளைகளில் பலர் படிப்பைப் பாதியிலேயே கைவிடுவதற்கு இதுவும் ஒரு காரணம். அரசாங்கம் இதைச் சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது. ஓராங் அஸ்லி போக்குவரத்து உரிமையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் உரிய நேரத்தில் அவர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டு பேருந்து சேவை சுமூகமாக நடப்பதை உறுதிப்படுத்த வேண்டும்”, என்றவர் வலியுறுத்தினார்.