ஏஏடிசி கல்லூரி மாணவர்கள் பிரச்சனை சுமூகமாகத் தீர்க்கப்பட்டது : பிடிபிகே கடனுதவி வழங்கப்படும்

இரண்டு நாட்களுக்கு முன்னர், போலிசாரால் கைது செய்யப்பட்ட ‘ஏலைட் ஏரோநோதிக் டிரெய்னிங் செண்டர்’ (Allied Aeronautic Training Centre) தனியார் பயிற்சிக் கல்லூரியின் மாணவர்கள் எழுப்பிய பிரச்சினை, இன்று மனிதவள அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சுமூகமாத் தீர்க்கப்பட்டது.

ஏஏடிசி மாணவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திற்கு இடையே நடந்த அச்சந்திப்பிற்கு மனிதவள அமைச்சர் எம் குலசேகரன் தலைமை தாங்கினார் என ஏஏடிசி மாணவர் அமைப்பு இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.

இன்று காலை நடைபெற்ற அக்கூட்டத்தில் ஏஏடிசி மாணவர் அமைப்பிலிருந்து 22 பேரும் பெற்றோர்கள் சார்பில் நால்வரும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் இறுதியில், மாணவர் அமைப்பின் தலைவர் மற்றும் செயலாலருக்குக் கொடுக்கப்பட்ட கல்லூரி நீக்கக் கடிதத்தை, ஏஏடிசி நிறுவன நிர்வாகம் திரும்பப் பெற்றுக்கொண்டதுடன், விரைவில் திறன் மேம்பாட்டு நிதிக் கழகத்தின் (பி.டி.பி.கே) கடனுதவியை ஏற்பாடு செய்து கொடுப்பதாகவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கட்டணம் செலுத்தாதக் காரணத்திற்காகக் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் ஏஏடிசி மாணவர்கள் தங்கள் படிப்பை மீண்டும் ஏஏடிசியில் தொடர்வதை மனிதவள அமைச்சு உறுதிசெய்ய வேண்டும் என்றும் ஏஏடிசி மாணவர் அமைப்பு அமைச்சைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இப்பிரச்சனைக்குச் சுமூகமாகத் தீர்வுகாண உதவிய மனிதவள அமைச்சுக்கும் அமைச்சர் எம் குலசேகரனுக்கும் மாணவர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

மேலும், இந்தப் போராட்டத்தில் தங்களுக்குத் துணையாக நின்ற மலேசிய சோசலிசக் கட்சிக்கும் (பிஎஸ்எம்), அதன் மத்திய செயலவை உறுப்பினரும், ஏஏடிசி மாணவர் அமைப்பின் ஆலோசகருமான சரண்ராஜ்-க்கும் அவர்கள் தங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.

கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி கைது செய்யப்பட்ட 8 பேரில் சரண்ராஜ்ஜும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.