தனது ஆதரவாளர்களிடையே நம்பிக்கை குறைந்து வருவதால், அரசியலில் இருந்து விலக அழைப்புகள் உருவாகியுள்ளதை லிம் கிட் சியாங் உணர்ந்துள்ளார்.
பல தசாப்தங்களாகப் போராட்டம் மற்றும் தியாகம் குறித்து பேசிய லிம், மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைக்க மாட்டேன் என்றும் புதிய மலேசியாவின் கொள்கைகள், நம்பிக்கைகள் மற்றும் குறிக்கோள்களை விட்டுவிட மாட்டேன் என்றும் உறுதியளித்துள்ளார்.
“நான் புதிய மலேசியாவை மறந்து, அரசியலில் இருந்து வெளியேற வேண்டுமா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எவ்வாறாயினும், மக்கள் அதனை உணர்ந்துகொள்ள காலம் பிடிக்கும் என்றும், அதுவரை டிஏபி கட்சித் தலைவர்களுக்குச் சகிப்புத்தன்மை, பொறுமை மற்றும் அர்ப்பணிப்பு இருக்க வேண்டும் என்றும் அந்த மூத்தத் தலைவர் வலியுறுத்தினார்.
இப்போது நாட்டில் பொதுத் தேர்தல் வந்தால், கேலாங் பாத்தா தொகுதி நாற்காலியை தான் இழக்க நேரிடும், நாடு முழுக்க டிஏபி 30-லிருந்து 40 விழுக்காடு வாக்குகளை இழக்கும் என லிம் தெரிவித்தார்.
“இதற்குக் காரணம், டிஏபி மற்றும் பக்காத்தான் ஹராப்பான் மீது, பழைய ஆதரவாளர்களுக்குத் தவறான எண்ணங்களும் புரிதல்களும் ஏற்பட்டுள்ளன.
“ஆதரவாளர்களுக்கும் மக்களுக்கும் டிஏபி துரோகம் செய்யவில்லை என்பதை உணர்த்த எங்களுக்கு நேரம் தேவை. மேலும், ஒற்றுமை, சுதந்திரம், நீதி மற்றும் ஒருமைப்பாட்டை அடைய, புதிய மலேசியா மீதான நம்பிக்கைகள் மற்றும் குறிக்கோள்களை நாம் விட்டுவிட முடியாது.
“மக்களுக்கும் புதிய மலேசியாவின் நம்பிக்கைகள் மற்றும் நோக்கங்களுக்கும் டிஏபி துரோகம் இழைத்திருந்தால், டிஏபியை மலேசியர்கள் தூக்கி வீசலாம்,” என்றும் அவர் சொன்னார்.