தேசிய உயர்க் கல்வி கடனுதவி நிறுவனம் (பிடிபிடிஎன்) கொடுத்த கடன்களைத் திரும்பப் பெற, அரசாங்க அமைப்புகளுடன் கலந்து பேசி வருகிறது.
குறிப்பாக நெடுநாளாகக் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களிடம் கடனைத் திரும்பப் பெற மாறுபட்ட அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது என்று கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் கூறினார்.
“கடன் வாங்குவோரில் கடனைத் திருப்பிச் செலுத்துவோரும் உண்டு திருப்பிச் செலுத்தாதவர்களும் உண்டு. இவர்களில் அண்மையில் பட்டம் பெற்றவர்களும் உண்டு, பட்டம் பெற்று நீண்ட காலம் ஆன பின்னரும் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களும் உண்டு.
“பட்டம் பெற்று 20 ஆண்டுகள் ஆகியும் கடனைத் திருப்பிக் கொடுக்காதவர்களைத்தான் நாங்கள் குறி வைக்கிறோம். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் கடனைக் கொடுக்க முடியாத நிலையில்தான் அவர்கள் இருக்கிறார்கள் என்பது சாத்தியமில்லாத ஒன்று”, என அமைச்சர் குறிப்பிட்டார்.
ஊழியர் சேம நிதி, உள்நாட்டு வருமான வாரியம் முதலிய நிறுவனங்களுடன் பேச்சு நடத்தப்பட்டு வருவதாக மஸ்லி கூறினார்.