பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) கூட்டணி ஆட்சியை இழக்கும் என்று நம்பும் அதன் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில், ஒருதலைப்பட்சமாக இருக்க வேண்டாம் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகட்டை நஜிப் ரசாக் வலியுறுத்தினார்.
அந்த முன்னாள் பிரதமரின் கூற்றுப்படி, யாரையாவது முதலில் தண்டிக்க வேண்டுமானால், அந்த நபர் டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்-ஆக இருக்க வேண்டும்.
“ஏழாவது பிரதமர் நடவடிக்கை எடுக்க விரும்பினால், அது கிட் சியாங்கில் இருந்து தொடங்க வேண்டும்.
“கிட் சியாங்கின் வாய் தீயது. முன்னம் இருந்தே அவர் தண்டிக்கப்பட வேண்டியவர்,” என்று, நேற்று இரவு தனது முகநூல் பக்கத்தில் நஜிப் எழுதியுள்ளார்.
தேர்தலில் தோல்வியடையும் என்று கூறி கட்சியைக் களங்கப்படுத்தும் நபர்களுக்கு எதிராக பெர்சத்து நடவடிக்கை எடுக்கும் என்ற மகாதீரின் அறிக்கை குறித்து நஜிப் கருத்து தெரிவித்தார்.
அவர் யாரையும் குறிப்பிடவில்லை என்றாலும், அவர் பெர்சத்து கட்சியின் கொள்கை மற்றும் திட்டப் பிரிவுக்கானத் தலைவர் டாக்டர் ரைஸ் ஹுசினைக் குறிப்பிடுவதாக நம்பப்படுகிறது.
ராயிஸ்-க்காக தான் அனுதாபப்படுவதாகக் கூறிய நஜிப், பி.எச்.-ல் பல தலைவர்கள், ராயிஸ்-ன் கருத்துடன் ஒத்துப்போவதாகவும் கூறினார்.
சுபாங் எம்பி வோங் சென், கிள்ளான் எம்பி சார்லஸ் சந்தியாகோ மற்றும் நிதியமைச்சர் லிம் குவான் எங் உட்பட கிட் சியாங்கும் அதில் அடங்குவார்.
2 நாட்களுக்கு முன்னர், இப்போது பொதுத் தேர்தலை நடத்தினால் பிஎச் தோற்றுப்போகும் என கிட் சியாங் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, இஸ்கண்டார் புத்ரி தொகுதியில் அவர் தோற்கக்கூடும் என்றும், நாடு தழுவிய அளவில், டிஏபி 30-லிருந்து 40 விழுக்காடு வாக்குகளை இழக்க நேரிடும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இதற்கிடையில், பிஎச்-இன் புகழ் குறைந்து வருவதை ஒப்புக் கொண்ட குவான் எங், அவர்களால் நிலைமையை மாற்ற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஆகஸ்ட் 28-ம் தேதி, ஒரு கருத்தரங்கில் பேசிய ரைஸ், வேலையின்மை, வாழ்க்கைச் செலவினம், முஸ்லீம் மலாய் வாக்காளர்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் போன்றவற்றைக் கையாள்வதில், மக்களுக்குப் பி.எச். மீது அதிருப்தி இருப்பதால், இப்போது பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் பி.எச். ஆட்சியை இழக்கும் என்று கூறியிருந்தார்.