1எம்டிபி ஊழலுடன் தொடர்பு உண்டு என்பதால், ‘பெமுடா அகாடமி ’ யின் RM428,500 பணத்தை அரசாங்கம் கைப்பற்ற உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
துணை அரசு வழக்குரைஞர் முஹமட் ஃபரேஸ் ரஹ்மான், அரசு தரப்பு விண்ணப்பத்தை அவர்கள் எதிர்க்கவில்லை என்று அறிவித்ததை அடுத்து, அந்தப் பணத்தின் உரிமையை இரத்து செய்வதாக நீதித்துறை ஆணையர், அஹ்மட் ஷாரீர் முகமட் சாலே தீர்ப்பளித்தார்.
நேற்று நடந்த வழக்கு விசாரணையின் போது, பெமுடா அகாடமியின் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை, அவர்களைப் பிரதிநிதித்து வழக்கறிஞர்களும் வரவில்லை.
பணமோசடி தடுப்புச் சட்டம் பிரிவு 56 (1), பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுப்பது மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் வருமானம் 2001 கீழ், அந்தப் பறிமுதல் விண்ணப்பம் செய்யப்பட்டது.
அகாடெமி பெமுடா, அம்னோ இளைஞர் பிரிவின் தொலைநோக்குத் திட்ட முகவராகச் செயல்பட்டு வந்தது.
கடந்த ஜூன் 21-ம் தேதி, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், 41 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது 1எம்டிபி தொடர்பான RM270 மில்லியனை மீட்பதற்காக பறிமுதல் வழக்கைத் தாக்கல் செய்வதாக அறிவித்தது.
அப்பணத்தில், சில மாநிலங்களும் அம்னோ பிரிவுகளும், மொத்தம் RM212 மில்லியனைப் பெற்று பயனடைந்துள்ளதாக எம்ஏஏசி தலைமை ஆணையர் லத்தீஃபா கோயா கூறினார்.
- பெர்னாமா